இது மக்கள் பிரச்சனை இல்லை.. எங்கள் கட்சி பிரச்சனை – கொந்தளித்த சீமான்
ம.பொ.சிவஞானத்தின் 29-வது நினைவு நாளை ஒட்டி, தியாகராய நகரில் உள்ள அவரின் சிலைக்கு நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது கட்சி நிர்வாகிகளுடன் வந்து மரியாதை செலுத்தினார்.
அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “மாவட்ட நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகுவது எங்கள் கட்சி பிரச்சனை. அது மக்கள் பிரச்சனை அல்ல. அதை நான் பார்த்துக்கொள்கிறேன். என் மீது அதிருப்தி இருப்பவர்கள் திருப்தி உள்ள இடத்திற்கு செல்வார்கள்.
வளர்ந்து வரும் கட்சியில் சிறு சிறு குறைகள் இருப்பது இயல்பு.மத்திய அரசுக்கு என்று ஏதாவது நிதி இருக்கிறதா? பேரிடர் காலத்தில் நிதியை வழங்காமல் புதிய கல்விக் கொள்கைக்கு கையெழுத்திட்டால்தான் கல்வித்துறைக்கு நிதியை தருவேன் என்று மத்திய அரசு கூறுவதை ஏற்க முடியாது.
மதுக்கடையை திறந்து யார்? இப்போது மூடுவதில் என்ன பிரச்சனை? விசிக மாநாட்டில் சொன்ன மதுவிலக்கை கொண்டு வந்த பிறகு அதில் ஏற்படும் பொருளாதார இழப்புக்கு ஏற்ப கூடுதலாக ஒரு நிதியை தர வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கிறேன்.
மதுக்கடைகளை மற்ற மாநிலங்கள் மூடுவதற்கு முன்பாக நாம் மூட வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்தினால் கள்ளச்சாராயம் வந்து விடும் என்று சொல்வதற்கு இவ்வளவு கட்டமைப்பு, காவல்துறை அதிகாரம் தேவையா?கருணாநிதியின் பேரன், மு.க.ஸ்டாலின் மகன் என்ற தகுதியைத் தாண்டி துணை முதலமைச்சராக உதயநிதிக்கு என்ன தகுதி உள்ளது? இதுதான் உலகத்திலேயே கொடிய சனாதனம்” என்று தெரிவித்தார்.





