--- --:--:-- --

கண்டெய்னரில் கட்டுக்கட்டாக பணம்..போலீசாரை தாக்கிய கும்பல்..!

1

நாமக்கல் மாவட்டம் சங்ககிரி பச்சப்பாளையம் பகுதியில் கேரள ஏடிஎம் கும்பல் கண்டெய்னர் லாரியுடன் பிடிபட்டது. போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த ஒருவன் உயிரிழந்தான்.

 

நாமக்கல் மாவட்டம் சங்ககிரி பச்சப்பாளையம் பகுதியில் வாகனங்கள் மீது மோதிவிட்டு கண்டெய்னர் லாரி நிற்காமல் சென்றது. கேரளாவில் இருந்து வந்த கண்டெய்னர் லாரி, வரும் வழியெல்லாம் விபத்தை ஏற்படுத்திக்கொண்டு நிற்காமல் செல்ல, போலீசார் லாரியை நீண்ட தூரம் விரட்டிப் பிடித்து நிறுத்தினர்.

 

முதலில் வாகனத்தில் சில குற்றவாளிகள் ஆயுதத்துடன் இருப்பதாகக் கூறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், ஈரோடு – சேலம் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர். கேரளாவின் திருச்சூரில் இருந்து வந்த அந்த கண்டெய்னர் லாரியில் சொகுசு காருடன் கட்டுக்கட்டாகப் பணமும் இருந்தது.கண்டெய்னரைத் திறக்கும் போது உள்ளே ஆயுதங்களுடன் இருந்த நபர்கள் போலீசாரைத் தாக்கினர்.

 

போலீசார் தற்காப்புக்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தி அவர்களைப் பிடித்தனர். முதற்கட்ட விசாரணையில் கேரள மாநிலம் திருச்சூர் பகுதிகளில் உள்ள ஏடிஎம்களில் கொள்ளையடித்துவிட்டு வந்த கும்பலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.லாரியில் ஏடிஎம்களை உடைப்பதற்கான ஆயுதங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

இதற்கிடையே, நாமக்கல் போலீசாரின் அதிரடி என்கவுன்ட்டரில் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். ஒருவனுக்கு காலில் காயம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மற்ற சிலரைக் கைது செய்து போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

 

பிடிபட்ட கண்டெய்னர் லாரியில் ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.67 லட்சம் இருந்தது. இதனை போலீசார் கைப்பற்றியுள்ளனர். பிடிபட்ட கண்டெய்னர் லாரிக்குள் பதிவு எண் இல்லாத ஹூண்டாய் கிரெட்டா காரும் கைப்பற்றப்பட்டது.பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவத்தால் பச்சப்பாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் எஸ்பி சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தி வருகிறார்.

Right Menu Icon