திமுக, விசிக உறவில் விரிசலா? – முதல்வர் ஸ்டாலின்
பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை 10 நிமிடங்கள் தனியாக சந்தித்துப் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், மது ஒழிப்பு மாநாட்டில் திமுக பங்கேற்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்துப் பேசினார். 30 நிமிடங்கள் சந்திப்பு நடந்த நிலையில், அதில் 10 நிமிடங்கள் இருவர் மட்டுமே தனியாக பேசியுள்ளனர். அப்போது அமெரிக்க பயணத்தை வெற்றிகரமாக முடித்து திரும்பியதற்காக முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், தேசிய மதுவிலக்கு கொள்கை ஒன்றை அறிவிக்குமாறு மத்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சரிடம் வழங்கினார்.
தொடர்ந்து முதலமைச்சரும், திருமாவளவனும் தனியாக சந்தித்துப் பேசினர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், விசிக-வின் மது ஒழிப்பு மாநாட்டில் திமுக-வும் பங்கேற்க உள்ளதாகத் தெரிவித்தார். நிர்வாகச் சிக்கலை கருத்தில் கொண்டு படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் உறுதியளித்திருப்பதாகவும் திருமாவளவன் கூறினார்.





