--- --:--:-- --

அம்மா உணவகத்தில் முதலமைச்சர் ஆய்வு..!

3

சென்னையில் அம்மா உணவகத்தை ஆய்வு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது மக்களுக்கு சுவையான மற்றும் தரமான உணவு வழங்குமாறு அறிவுறுத்தினார். மேலும் சென்னையில் அம்மா உணவகங்களை மேம்படுத்த 21 கோடி ரூபாய் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார்.

 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்த அம்மா உணவகத் திட்டத்தை தற்போது அரசு முடக்க இருப்பதாக அதிமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி 22 வது வார்டு தேனாம்பேட்டை பகுதியில் இயங்கி வரும் அம்மா உணவகத்திற்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

 

உணவகம் செயல்படும் முறை பொது மக்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் ஆகியவற்றை சோதனை செய்வதோடு உணவருந்து சென்ற பணியாளர்களிடம் அவர் உரையாடினார்.

 

அம்மா உணவகங்களை தொடர்ந்து சிறப்பாக நடத்த உத்தரவிட்ட முதலமைச்சர் சமையலறை மற்றும் உணவு கூடத்தை தூய்மையாக பராமரிக்கவும் சுவையான மற்றும் தரமான உணவை தயாரித்து வழங்கவும் அறிவுறுத்தினார். ஆய்வின் போது பல்வேறு அம்மா உணவகங்களில் பாத்திரங்கள் மற்றும் சமையல் கருவிகள் பழுதடைந்து இருப்பதாக முதலமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.

 

இதனையடுத்து புதிய பாத்திரங்கள் மற்றும் சமையல் கருவிகளை வாங்க ஏழு கோடி ரூபாயும் அம்மா உணவகங்களை புணரமைக்க 14 கோடி ரூபாயும் ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

 

மேலும் தங்கள் பகுதிகளில் இருக்கும் அம்மா உணவகங்களுக்கு அவ்வப்போது நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தேவையான உதவிகளை செய்து தர வேண்டும் என்றும் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon