இளம்பெண்ணின் உயிரை பறித்த இன்ஸ்டா ரீல்ஸ் மோகம்..!
மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் அமைந்துள்ள கும்பே அருவியில் ரீல்ஸ் எடுக்க முயன்ற இன்ஸ்டா பிரபலம் 300 அடி பள்ளத்தில் விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கும்பே அருவி இந்தியாவில் அமந்துள்ள புகழ்பெற்ற அருவியாகும். வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய் அந்த அருவிக்கு செல்வது போல பாடல் காட்சி படமாக்கப்பட்டிருக்கும். இந்த அருவி இந்தியாவில் எங்குள்ளது என்று தமிழர்கள் பலரும் இணையத்தில் தேடி பயணம் செய்ய ஆரம்பித்தனர்.
இந்நிலையில், இன்ஸ்டா பிரபலமான 27 வயதான அன்வி காம்தர் இந்த கும்பே அருவிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இவரது இன்ஸ்டா பக்கத்தை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.ரீல்ஸ் எடுத்து தனதுஇன்ஸ்டா பக்கத்தில் பதிவிடும் வழக்கம் கொண்டஇவர் அருவியின் அருகே 300 அடி பள்ளத்திற்கு அருகில் சென்று வீடியோ எடுத்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக கால் இடறி 300 அடி பள்ளத்திற்கு அன்வி விழுந்து மறைந்து போனார். சில நொடிகளில் இந்த சம்பவம் அரங்கேறிய நிலையில் உடன் வந்த நண்பர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயினர்.உடனே போலீசாருக்கும், மீட்பு படையினருக்கு நண்பர்கள் தகவல் கொடுத்துள்ளனர்.
விரைந்து வந்த மீட்புப்படையினர் மலையேறும் வீரர்கள் உதவியுடன் சிக்கலான அந்த பள்ளத்தாக்கில் கயிறு உள்ளிட்ட பாதகாப்பு உபகரணங்களுடன் இறங்கி அன்வியின் உடலை தேடினர். சுமார் 6 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பள்ளத்தாக்கின் அடியில் அருவியின் ஓரமாக இருந்த புதர் பகுதியிலிருந்து அன்வியை பலத்த காயங்களுடன் மீட்டனர். எனினும் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே அவரின் உயிர் பிரிந்தது.
பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு அதை வீடியோவாக பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள அன்வியின் எதிர்பாராத இந்த உயிரிழப்பு அவரது ஃபாலோயர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்ஸ்டாவில் ரீல்ஸ் வீடியோ போடுபவர்கள் இதுபோன்று ஆபத்தான வகையில் வீடியோ எடுப்பதை தவிர்க்க வேண்டும் என போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.
இன்ஸ்டா ரீல்ஸ் மோகத்தில் ஏற்கெனவே பல்வேறு உயிர்கள் பறிபோயிருக்கும் நிலையில் தற்போது இளம் இன்ஸ்டா பிரபலம் உயிரிழந்திருப்பது பலரையும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




