விஜய் வசந்த் பெயரை சொல்லி ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக மோசடி..!
கன்னியாகுமரியில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பெயரை சொல்லி, ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக பல கோடி ருபாய் ஏப்பம் விட்டதாக காங்கிரஸ் ஊராட்சி மன்ற தலைவி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே அமைந்துள்ளது, கொல்லஞ்சி ஊராட்சி. இதன் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சலோமி என்பவர் பொறுப்பு வகிக்கிறார். இவரும் இவரது கணவர் சோபிதாசும் சேர்ந்து மெகா மோசடி வேலையை அரங்கேற்றியதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்களில் ஆண்மகன்களை மட்டும் கொண்டுள்ள நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெற்றோர்களைக் குறிவைத்து கைவரிசை காட்டியதாகக் கூறப்படுகிறது.அவர்களது மகன்களுக்கு மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்தியன் ரயில்வே மற்றும் உணவுத்துறை உள்ளிட்டவற்றில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்களின் கோட்டாவில் வேலை வாய்ப்பு இருப்பதாகவும், அவற்றை உங்களுக்கு வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி உள்ளார்.
இதனை உண்மை என நம்பிய பெற்றோர், பல இடங்களில் கடன் மற்றும் சொத்துகளை அடமானம் வைத்து அதில் கிடைத்த பணங்களை ஊராட்சி தலைவி சலோமியிடம் கொடுத்துள்ளனர்.30-க்கும் மேற்பட்ட பெற்றோரிடம் 15 லட்சம் ரூபாய் வீதம் 4 கோடி ருபாய் வரை வாங்கிய சலோமி, பணம் கொடுத்த பெற்றோரின் மகன்களை, சென்னை பூனே டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் பயிற்சிக்கு செல்ல வேண்டும் என்று கூறி உள்ளார்.
உடனே பல்வேறு இடங்களில் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்த இளைஞர்கள் தங்களது வேலைகளை விட்டு விட்டு, ஊராட்சி தலைவி சலோமி கூறியது போல் சென்னை டெல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும், சென்று பல மாதங்கள் தங்கி உள்ளனர்.
இதனையடுத்து மீண்டும் அவர்களை ஊருக்கு அழைத்த சலோமி இன்னும் ஒரு சில நாட்களில் உங்களுக்கு அரசுப்பணிக்கான, ஆணை வரும் அதனை வாங்கிய பின் அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் சென்று பணியில் சேரலாம் என்று கூறி உள்ளார்.
இந்த நிலையில் இளைஞர்கள் அனைவருக்கும் மத்திய இரயில்வே துறை மற்றும் உணவுத்துறை உள்ளிட்ட முத்திரைகள் மற்றும் அதிகாரிகளின் கையெழுத்துகள் போடப்பட்ட பணி ஆணைகள் வந்துள்ளன.இந்த ஆணைகளை வாங்கிக்கொண்ட இளைஞர்கள் வேலையில் சேர வேண்டி டெல்லி தலைமை அலுவலகத்திற்குச் சென்ற போதுதான் அது போலியானது என தெரியவந்தது. இதுபோன்று எந்த ஒரு ஆணைகளும் வழங்கப்படவில்லை என்று கூறிய அதிகாரிகள், இளைஞர்கள் திருப்பி அனுப்பி உள்ளனர்.
மிகுந்த ஏமாற்றத்துடன் ஊர் திரும்பிய இளைஞர்கள் நடந்தவற்றை தங்களது பெற்றோரிடம் கூறி சலோமியிடம் சென்று முறையிட்டுள்ளனர். உடனே சுதாரித்துக் கொண்ட சலோமி ஏதேதோ சொல்லிச் சமாளித்து அவர்களை திருப்பி அனுப்பி உள்ளார்.
கடன் வாங்கி பணம் கொடுத்த பெற்றோர் ஊராட்சிமன்ற தலைவிக்கு அழுத்தம் கொடுக்க ஓரிரு நாட்களில் உங்களுடைய பணத்தை திரும்ப தருவதாகக் கூறி நாட்களைக் கடத்தி வந்துள்ளார்இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர். அது தொடர்பாக விசாரணையைத் தொடங்க ஊராட்சி மன்ற தலைவி சலோமி தனது குடும்பத்துடன் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.






