போக்குவரத்து பெண் சார்பு ஆய்வாளரை தகாத வார்த்தையால் பேசிய பாஜக நிர்வாகி கைது..!
சிவகங்கையில் பெண் சார்பு காவல் ஆய்வாளரை தகாத வார்த்தையால் திட்டியதாக பாஜக நகர தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது நடவடிக்கையை கண்டித்து பாஜக நிர்வாகிகள் காவல் நிலையம் முன்பு திரண்டனர்.
சிவகங்கை நகர பாஜக தலைவர் ஆன உதயா மதுரை நோக்கி தனது காரில் சென்றுள்ளார். அப்பொழுது முனியாண்டி கோயில் பகுதியில் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். சீட் பெல்ட் அணியாதது குறித்து அழகு ராணி கேள்வி எழுப்பினார்.
இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்படவே அழகு ராணியை பாஜக நகர தலைவர் உதயா தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து போக்குவரத்து காவல் சார்பாய்வாளர் அழகு ராணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து உதயா கைது செய்யப்பட்டார்.
தகவல் அறிந்த பாஜக நிர்வாகிகள் சிவகங்கை நகர காவல் நிலையம் முன்பு திரண்டனர். ஏற்கனவே கார் நம்பர் பிளேட் விவகாரத்தில் அழகு ராணிக்கு உதயாவுக்கும் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.





