கள்ளச்சாராய விவகாரத்தில் உயிரிழப்பு அதிகரிக்க இது தான் காரணம்..!
கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரத்தில் இரு நாட்களுக்கு முன் சட்டவிரோதமாக விற்கப்பட்ட கள்ளச் சாராயத்தை வாங்கி சிலர் அருந்தினர். அதில் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஏற்கெனவே 47 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாபுரத்தைச் சேர்ந்த வீராசாமி உயிரிழந்தார். அதேபோல சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சங்கர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.
கள்ளச்சாராயத்தால் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
ஜிப்மரில் 9 பேர் ஆபத்தான நிலையிலும், அதில் 4 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையிலும் இருப்பதாகவும், சேலம் அரசு மருத்துவமனையில் 8 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார்.தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்கப்படுகிறது என்றார்.
மேலும் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் மருத்துவமனைக்கு வர தயங்கியதால் தான் உயிரிழப்பு அதிகரித்ததாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே மாவட்ட ஆட்சியர்கள் காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அவசர ஆலோசனை மேற்கொண்டார். கள்ளச்சாராயத்தை தடுக்க மாவட்டங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




