மின்விநியோகம் நிறுத்தப்பட்டதால் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்..!
பொன்னேரி நகராட்சி பகுதிகளில் மின்தடையை கண்டித்து இரவு முழுவதும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சி பகுதிகளான சின்ன காவலூர் திரு ஆயர்பாடி பாலாஜி நகர் உள்ளிட்ட இடங்களில் மாலை 4 மணி முதல் மின்தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மின்சாரம் இன்றி தவித்த அந்த பகுதி மக்கள் இரவு 8 மணி முதல் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள செங்குன்றம் பழைய காடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்பொழுது அரசு பேருந்தை சிறைபிடித்த மக்கள் மின்வாரிய அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் யாரும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.
ஆறு மணி நேரம் போராட்டம் தொடர்ந்த நிலையில் நள்ளிரவு 2 மணியளவில் அந்த பகுதிகளுக்கு மின்விநியோகம் கிடைத்தது. இதனையடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.





