நர்ஸ் பிரசவம் பார்த்ததால் உயிரிழந்த குழந்தை..!
திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திருச்செந்தூரைச் சேர்ந்த வினோத் சசிகலா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் இரண்டாவது பிரசவத்திற்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த ஆறாம் தேதி சசிகலா அனுமதிக்கப்பட்டார்.
அன்று பிற்பகல் செவிலியர்கள் பிரசவம் பார்த்தபோது பெண் குழந்தை பிறந்ததாகவும் ஆனால் அடுத்த நாளே மூச்சு திணறல் ஏற்பட்டதாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு குழந்தை எடுத்து செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஒன்பதாம் தேதி குழந்தைக்கு வலிப்பு வந்ததாக கூறப்படும் நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி குழந்தை உயிர் இழந்தது. இதனால் சோகமடைந்த குழந்தையின் தந்தை வினோத் மற்றும் உறவினர்கள் செவிலியரின் அலட்சியத்தால் குழந்தை இறந்ததாக கூறி திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.





