திமுக – அதிமுக தேர்தல் பிரசாரம் – அண்ணாமலை விமர்சனம்
மாநில தேர்தல் போல் திமுகவும், கவுன்சிலர் தேர்தல் போல் அதிமுகவும் பிரசாரம் செய்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே மணிக்கூண்டு பகுதியில் ஶ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேணுகோபாலை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர், “திமுக தேர்தல் வாக்குறுதிகளை 20% கூட நிறைவேற்றவில்லை. ஆனால் 99% வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக பொய் கூறுகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்தும் செய்வோம் என்று கூறி ஏமாற்றி வருபவர்கள் தான் திமுக, பொய் பேசுவர்களுக்கு சிறந்த பரிசு கொடுக்கவேண்டும் என்றால் அது முதல்வர் ஸ்டாலினுக்கு தான் கொடுக்க வேண்டும்.
திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு மனைவியின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 350% சொத்து உயர்ந்துள்ளது. இதுதான் திமுக வெற்றி பெற்றால் அவர்களின் சொத்து மதிப்பு தான் உயருமே தவிர உங்களின் வாழ்வாதாரம் உயராது. திமுக செய்த சாதனையே ₹3.50 லட்சம் கோடி கடன் வாங்கியது தான், நாட்டிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழகம் தான்.
திமுக மாநில தேர்தல் போல் பிரசாரம் செய்கிறது. அதிமுக மாநில தேர்தல் போல் பிரச்சாரம் செய்கிறது. மத்தியில் யாரு ஆட்சிக்கு வரவேண்டும் என இரு கட்சிகளும் பிரச்சாரம் செய்யவில்லை” இவ்வாறு அண்ணாமலை பேசினார்.





