கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் – முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜூ, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் கிளாம்பாக்கத்துக்கு மாற்றப்பட்டதால் மக்கள் அவதிப்படுவதாக கூறினார். மக்கள் வசதிக்காக பேருந்துகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும் மக்கள் அமைச்சரை சபாஷ் என வாழ்த்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார்.
அதற்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பதிலளித்தார். அப்போது, “கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்க அதிமுக அரசு தான் முடிவெடுத்தது. 30% மட்டுமே முடிக்கப்பட்ட பணியை திமுக அரசு சிறப்பாக நிறைவேற்றி உள்ளது. ஒரு மாற்றம் வரும் போது சில தயக்கம் இருக்கும். பாரிமுனையில் இருந்து கோயம்பேட்டிற்கு பேருந்து நிலையம் மாற்றப்பட்ட போதும் இதே பிரச்சினை இருந்தது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டனர். பேருந்தில் பயணிப்பவர்கள் யாரும் குறை சொல்லவில்லை. பயணிக்காதவர்கள் தான் பிரச்சனை செய்கின்றனர்.மக்களின் நலன் கருதி தான் வடசென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 20% பேருந்துகள் இயக்கப்படுகிறது. இனி தென் மாவட்டங்களுக்கு கோயம்பேட்டில் இருந்து இயக்க வாய்ப்பில்லை.” என்று கூறினார்.
அவரை தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, “நிரந்தர தீர்வாக மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் 100% பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வளவு வசதிகள் இருக்கிறது. தூங்குபவர்களை எழுப்பலாம் தூங்குபவர்கள் போல் இருப்பவர்களை எழுப்ப முடியாது. கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என்று பெயர் வைத்ததால் தான் இது போன்ற அவதூறுகளை பரப்பி வருகிறார்கள்.
கிளம்பாக்கத்தில் உள்ள வசதிகளை பார்ப்பதற்காக சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் அழைத்துச் செல்லவும் தயார் நிலையில் இருக்கிறோம்.” என கூறினார்.அவரை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “பயணிகள் பாதிப்பு குறித்து ஊடகங்களில் வெளி வந்த செய்திகளின் அடிப்படையில் தான் அறிக்கை வாயிலாக சுட்டிக்காட்டினோம்.
சிறு சிறு பிரச்சனைகள் உள்ளதாக அமைச்சரே கூறியுள்ளார். அதை சரி செய்தப்பின் திறந்திருக்கலாமே என தான் கேட்கிறோம்.” என பேசினார்.தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “பேருந்து நிலையத்தில் சிறு சிறு பிரச்சனை அல்ல பெரிய பிரச்சனைகளே இருந்தது. அவற்றையெல்லாம் தீர்த்து வைத்துள்ளோம். நீங்கள் சுட்டிக்காட்டும் பிரச்சனைகளும் தீர்த்து வைக்கப்படும்.” என பதிலளித்தார்.





