--- --:--:-- --

கலைஞர் 100… சொதப்பியது யாரு? காலி இருக்கைகள்… புறக்கணித்த நடிகர்கள்! அவசரகதி விழாவால் ஸ்டாலினுக்கு சங்கடம்..!

3.7

சென்னையில், கலைஞர் 100 என்ற பெயரில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா, பெரும் சொதப்பலில் முடிந்துள்ளது. முன்னணி நடிகர், நடிகைகள் வராத நிலையில், முறையான திட்டமிடல் இல்லாததால் விழாவில் பல குளறுபடிகள் ஏற்பட்டன. இதனால், முதல்வர் ஸ்டாலின் உள்பட பலரும் அதிருப்தியடைந்ததாகக் கூறப்படுகிறது.

 

சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் ஜன. 6ஆம் தேதியன்று மாலை, கலைஞர்100 என்ற பெயரில் பிரம்மாண்ட விழா நடைபெற்றது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில் 12 திரைப்பட அமைப்புகள் இணைந்து, முன்னாள் முதல்வர் மு. கருணாநிதிக்கு நூற்றாண்டு விழாவை போற்றும் வகையில் இவ்விழாவை நடத்தின.

 

இந்த விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மு.பெ.சாமிநாதன் மற்றும் ரஜினி, கமல், சூரியா, தனுஷ், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ஆந்திர அமைச்சரும் முன்னாள் நடிகையுமான ரோஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.

ஜன. 8ஆம் தேதி மாலை 4.30 மணியளவில், கலைஞர் 100 நூற்றாண்டு விழா, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளோடு தொடங்கியது. விழாவின் இடையிடையே கருணாநிதி குறித்த ஆவணப் படங்கள் மற்றும் கே.எஸ் ரவிக்குமார் இயக்கிய நாடகமும் அரங்கேறியது. கலந்து கொண்ட பிரபலங்கள், முன்னாள் முதல்வர் கருணாநிதியுடனான தங்களது அனுபங்கள் குறித்தும் பல்வேறு நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

 

இவ்விழாவில் பேசிய நடிகர் சூர்யா, கருணாநிதியை வெகுவாக புகழ்ந்தார். “ பராசக்தி படத்தில் ஒரு வசனம் இடம் பெற்றிருக்கும். அதில் உள்ள கதாபாத்திரம், சிவாஜியை பார்த்து, நீ வேண்டுமானால் ஆட்சிக்கு வந்து கை ரிக்ஷா முறையை ஒழித்துக்காட்டேன் என்று பேசும். அதேபோல், ஆட்சிக்கு வந்ததும் கைரிக்ஷா முறையை ஒழித்தவர் கலைஞர்” என்றார்.

 

நடிகர் தனுஷ், “முதல்வர்னாலே வானத்துல எட்ட முடியாத நட்சத்திரமா இருக்கணும்னு இல்லாம ரொம்ப எளிமையா நம்மளோடவே இருக்குற மாதிரி எளிமையான முதல்வரா ஸ்டாலின் இருக்காரு…” முதல்வர் ஸ்டாலினை வெகுவாக புழந்தார்.

 

நடிகர் ரஜினி தனது உரையில், “கருணாநிதி மட்டும் அரசியலுக்கு வராமல் சினிமாவில் இருந்திருந்தால் இன்னும் பல சிவாஜி கணேசன்கள் உருவாகி இருப்பார்கள். ஒரு சிலர் நன்றாக பேசினால், எழுத வராது; சிலர் நன்றாக எழுதினால் அவர்களுக்கு பேச வராது, கருணாநிதிக்கு இரண்டுமே இருந்தது” என்றார். வழக்கம்போல் குட்டிக்கதை, கருணாநிதியுடனான சந்திப்புகளை நினைவு கூர்ந்தார் ரஜினி.

 

ரஜினியின் பேச்சினை சமூக வலைதளங்களில் பலர் கிண்டல் செய்தனர். கருணாநிதி அரசியலுக்கு வந்திருக்கக்கூடாது என்று ரஜினி சொல்கிறாரா என்று பலரும் கேள்வி எழுப்பினர். கமலும் தன் பங்கிற்கு விழாவில் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினார். கருணாநிதியை போல் சிறுவயதில் நடு வகிடு எடுத்து தலையை வாரிப்பார்த்ததாக கமல் குறிப்பிட்டியார்.

 

 

அதன் பின் பேசிய முதல்வர் ஸ்டாலின்,“பல்வேறு அமைப்புகள் இந்த கலைஞர் நூற்றாண்டு விழாவை மிகச் சிறப்பாக நடத்தி உள்ளீர்கள். முதலமைச்சர் என்ற முறையில், கலைஞரின் மகன் என்ற முறையில் உங்களுக்கு நன்றி கூறிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். பூந்தமல்லியில் ரூ.540 கோடி மதிப்பில் நவீன திரைப்பட நகரம் அமைய உள்ளது. ரூ.25 கோடி மதிப்பில் எம்ஜிஆர் திரைப்பட நகரம் மேம்ப்படுத்தப்படும்” என்றார்.

 

ஆளும் திமுக அரசுக்கு நன்றிக்கடனாக கருணாநிதி நூற்றாண்டு விழாவை திரைத்துறையினர் நடத்தியபோதும், இதில் பல குளறுபடிகள் ஏற்பட்டன. இதனால், விழா பெரும் சொதப்பலில் முடிந்ததாக, சமூக வலைதளங்களில் பெருவாரிய நெட்டிசன்கள் விமர்சனத்தை முன் வைத்தனர். குறிப்பாக, உச்ச நட்சத்திரமான ரஜினி பேசியபோது, பின்வரிசையில் நூற்றுக்கணக்கான காலி இருக்கைகள் இருந்த வீடியோவை பலரும் பகிர்ந்து, கிண்டல் செய்தனர்.

 

அதேபோல், விழாவில் பல முன்னணி நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை. அஜித் அசர்பைஜான் நாட்டில் உள்ளார். விஜய், பிரபு, விக்ரம் பிரபு, ஆர்யா, விஜய் சேதுபதி, விஷால், சிம்பு, விக்ரம், குஷ்பூ, ராதிகா, பிரியா பவானிசங்கர் என விழாவில் பங்கேற்காக பிரபலங்களின் பட்டியல் நீளுகிறது. மோகன்லால், மம்முட்டி, பிரபாஸ் என பிற மொழி நடிகர்கள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தும், அவர்கள் யாருமே வரவில்லை. விஜயகாந்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வராத நடிகர் வடிவேலு, இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்ததை நெட்டிசன்கள் இணையதளங்களில் வறுத்தெடுத்தனர்.

 

விழா மேடையிலும் பல குளறுபடிகளை பார்க்க முடிந்தது. அவ்வப்போது மின்விளக்குகள் கோளாறு, அரங்கில் போதிய வசதியில்லாதது, டி.ராஜேந்தர் போன்ற சீனியர்களுக்கு 2வது வரிசையிலும், ஆர்.ஜே. பாலாஜி போன்ற இன்றைய இளம் நடிகர்களுக்கு முதல் வரிசையிலும் இருக்கை ஒதுக்கி இருந்தனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பிலும் பல குளறுபடிகள் நடந்ததால், அடுத்து என்ன நிகழ்ச்சி, யார் நடமாட வருவார்கள் என்ற குழப்பத்தில் நேரம் விரயமாக, அமர்ந்திருந்த பார்வையாளர்கள் நெளிந்தார்கள்.

பூந்தமல்லி அருகே திரைப்பட நகர் 560 கோடி ரூபாயில் அமைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கும் பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏற்கெனவே நிதிப்பற்றாக்குறையில் அரசு தடுமாறும்போது இந்த அறிவிப்பு தேவையா? இன்று தொழில் நுட்பம், செயற்கை நுண்ணறிவு வளர்ந்துவிட்ட நிலையில், திரைப்பட நகரம் கட்டி வீணடிக்கப்படும் என்பதே உண்மை என்று பலதரப்பினரும் கருத்து தெரிவித்து, இம்முடிவு தவறானது என்று விமர்சித்து வருகின்றனர்.

 

இது குறித்து, திரைத்துறையினர் சிலரிடம் குற்றம் குற்றமே தரப்பில் பேசியபோது,  கலைஞருக்கு பாராட்டுவிழா நடத்த முயன்ற திரைத்துறையினர், அரசுக்கு ஜால்ரா போடுவதில் காட்டிய வேகத்தை நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பதிலும் திட்டமிட்டு செய்வதிலும் காட்டவில்லை என்றே தெரிகிறது. சக திரைப்பட நடிகர்கள், கலைஞர்களே வராததில் இருந்தே, இந்த விழா எத்தகைய அவசரகதியில் நடந்துள்ளது என்பது புரிகிறது.

 

மிக்ஜாம் புயல், தென்மாவட்ட மழை பாதிப்பில் இருந்தே மக்கள் இன்னமும் முழுமையாக விடுபடவிலை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வலர்கள் பலர் ஓடிப்போய் உதவி வரும் நிலையில், திரைத்துறையினர் தங்கள் பங்கிற்கு ஏதாவது செய்திருக்க வேண்டும். அதை விடுத்து ஆட்சியாளர்களை குளுமை படுத்துவதாக நினைத்து, அரைகுறையாக ஒரு நிகழ்ச்சியை நடத்தி, மக்களின் அதிருப்தியையும், ஆளுங்கட்சியினரின் அதிருப்தியைத் தான் சம்பாதித்துள்ளனர்” என்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon