வெள்ள பாதிப்புகளை இன்று ஆய்வு செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆய்வு செய்கிறார். கடந்த 16ம் தேதி முதல் 4 நாட்கள் கொட்டித்தீர்த்த பெரும் கனமழையால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன. வீடுகளுக்குள் தேங்கிய வெள்ளநீர் தற்போது தான் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.
இந்நிலையில், நெல்லை, தூத்துக்குடி மழை, வெள்ள பாதிப்புது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டறிந்த பிரதமர் நரேந்திர மோடி, பாதிப்புகளை ஆய்வுசெய்ய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நியமித்துள்ளதாக தெரிவித்தார்.
இதன்படி, விமானம் மூலம் சென்னைக்கு நிர்மலா சீதாராமன் நேற்று இரவு வந்தடைந்தார். தூத்துக்குடிக்கு இன்று காலை செல்லும் அவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
பின்னர் அந்தோணியார் பாளையத்தில் ஏற்பட்டுள்ள சாலை சேதம், கோரம்பள்ளம் குளம், ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நிர்மலா சீதாராமன் நேரில் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





