காவிரி விவகாரத்தில் அதிரடி முடிவை எடுக்கும் தமிழ்நாடு அரசு!
காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டுவரவுள்ளார்.
காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை தர கர்நாடக அரசு மறுப்பதால், டெல்டா மாவட்டங்களில் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு மாதங்களாக பாசனத்திற்கு தேவையான நீர் கிடைக்காததால் நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், வரும் 9ஆம் தேதி தொடங்கவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தனித் தீர்மானம் கொண்டு வர தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
கூட்டத்தொடரின் முதல்நாளிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த தனித் தீர்மானத்தை முன்மொழியவுள்ளார். காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, மேலாண்மை ஆணைய உத்தரவின்படி, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசுக்கு வலியுறுத்தி இந்த தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.இது அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் ஆதரவுடன் நிறைவேற்றப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.





