12 ,525 கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம சபைக் கூட்டம்..!
காந்தி ஜெயந்தியை ஒட்டி இன்று தமிழ்நாட்டில் உள்ள 12 , 525 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. ‘இந்தியா’ கிராமங்களில் வாழ்கிறது என்று கூறிய காந்தியடிகளின் பிறந்த தினமான அக்டோபர் 2 ஆம் தேதி கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகிறது.
கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வதற்கு ஏதுவாக ஜனவரி 26 குடியரசு தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், மே 1 தொழிலாளர் தினம் மற்றும் அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.
மேலும், மக்களதிகாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் கிராம சபைக் கூட்டங்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரிக்கப்பட்டது. அதன்படி, வழக்கமான 4 தினங்களுடன் சேர்த்து மார்ச் 22 உலக தண்ணீர் தினம் மற்றும் நவம்பர் 1 உள்ளாட்சி நாளிலும் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுகிறது. இதில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக உரையாற்ற உள்ளார். அத்துடன், அமைச்சர்கள் தங்களது பகுதியில் உள்ள கிராம சபை கூட்டங்களில் பங்கேற்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிய உள்ளனர்.





