திமுகவுக்கு `தண்ணியில’ கண்டம்! பல்லடம் கொக்கரகோ பாருக்கு பூட்டு…தீயாய் பரவிய ஆடியோவால் வேட்டு..!!
பல்லடத்தில் சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான கொக்கரகோ மதுபான பாரில் ஒரு பீர் ரூ.300 வரை விலை வைத்து விற்பனை செய்யப்படுவதாகவும் இதனால் திமுக அரசுக்கு கெட்டப்பெயர் என்றும் அப்பகுதி திமுக மாவட்ட அணி அமைப்பாளர் ஒருவரே ஆதங்கத்துடன், மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு ஆடியோ ஒன்றை பதிவிட்டு அனுப்பியது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதனிடையே, சர்ச்சைக்குரிய மதுபான பார் தற்போது பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
ஆளும் திமுகவுக்கு தற்போது “தண்ணியில்” கண்டம் போலிருக்கிறது. கள்ளச்சாராய விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பி ஓய்வதற்குள், திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் உள்ள திமுக நிர்வாகிக்கு சொந்தமான மதுபான பாரில் அதிக விலைக்கு பீர் விற்றதை, சக திமுக நிர்வாகியே ஆதங்கத்தோடு பேசிய ஆடியோ, திருப்பூர் மாவட்ட திமுகவுக்கும் தலைமைக் கழகத்திற்கும் பெரும் தர்மசங்கடத்தையும் அவப்பெயரையும் ஏற்படுத்தி இருக்கிறது.
ஓவராக கூவிய கொக்கரகோ!
பல்லடம் மெயின் ரோட்டில் செயல்பட்டு வந்துள்ளது, கொக்கரகோ என்ற இந்த தனியார் மதுபானபார். இங்கு உணவகத்துடன் இணைந்த பார் வசதி உள்ளது. இதன் உரிமையாளராக இருப்பவர் சாமிநாதன். கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பார் செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், கொக்கரகோ மதுபான பாரில் மதுபானங்கள் அதிக விலைக்கு வைத்து விற்பனை செய்து பகல் கொள்ளை நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனினும், அதிகாரிளும், போலீசாரும் இதை கண்டுகொள்ளாமல் தங்கள் மாமூல் பணிகளைத் தொடர்ந்தனர்.
ஆனால், அங்கு நடைபெறும் முறைகேடுகளை, தற்போது பல்லடம் திமுக நிர்வாகியே ஒப்புதல் வாக்குமூலம் வழங்குவது போல் வெளிப்படையாகப் பேசிய, புட்டுப்புட்டு வைத்துள்ளார். அவரது ஆடியோதான் சமூக வலைதளங்களில் தற்போது ஹாட் டாபிக்காக உள்ளது.
புலம்பி ஆடியோ வெளியிட்ட உடன்பிறப்பு
சர்ச்சைக்குரிய அந்த ஆடியோவில் அப்படி என்ன இருக்கிறது? அதில் இடம் பெற்ற கருத்துகளின் சாராம்சம் இதுதான்: “அன்பார்த்த திமுக தோழர்களே, நானும் திமுககாரன்தான். பல்லடத்தில் நகர மாணவரணிச் செயலாளரா இருக்கேன். பல்லடம் கொக்கரோ பாரில் பீர் குடிக்கப் போனேன். சாப்பிட்டு முடிச்சு பின்னாடி, அங்கு ஒரு பீர் விலை 300 ரூபாய்ன்னு சொன்னாங்க. இது அதிர்ச்சியா இருந்துச்சு. உங்க பார் ஓனரை சாமிநாதனைக் கூப்பிடுங்கன்னு கேட்டேன். கடையில் இருந்த அவரும் என்கிட்ட வந்து பேசி, வாக்குவாதம் செஞ்சாரு. ஏப்பா பீர் 300 ரூபாய்தான். குடிச்சாச்சுன்னா பேசாம பணத்தை கொடுத்துட்டு போன்னு சொன்னாரு.

அண்ணா, நேத்து குடிச்சேன் 220 ரூபாய்தான். இப்ப குடிச்சதுக்கு 300 ரூபாய் கேக்கறீங்களேன்னு கேட்டேன். அதற்கு அவர் என்ன பதில் சொல்றாரு தெரியுமா? நான் எல்லாருக்கும் பணம் கொடுக்கணும். நகரத்துக்கு பணம் கொடுக்கணும், அமைச்சருக்கு பணம் கொடுத்திட்டு இருக்கேன். நீ யாரை வேணாலும் கூப்பிடு. உன்னால முடிஞ்சதைப் பாருன்னு சொல்றாரு. எதுக்கு சாராய கடைகள் எல்லாம் போய் பணம் வாங்குறீங்க. நீங்க (கட்சி முக்கிய புள்ளிகள்) பணம் வாங்குவதற்கு நாங்க (கட்சித் தொண்டர்கள்) கஷ்டப்பட்டு கொண்டு போய் அங்க பணம் கொடுக்கணுமா?
பீர் விலை 300… மானங்கெட்ட பொழப்பு
ஒரு கட்சிக்காரனை மிரட்டி 300 தான் பீர் பணத்தை எடுத்து வைனு மிரட்டுறாங்க. ஒரு கட்சிக்காரனுக்கு ஊருக்குள்ள சப்போர்ட் இல்லையா? யாராவது ஒருத்தர் பணம் வாங்கிட்டா, கட்சிக்காரன் பூரா அடிமையா..? இதை பதிவு பண்ணவே எனக்கு வெட்கமா இருக்கு, கேவலமா இருக்கு. ஏன்னா நான் மட்டும் பாதிக்கப்படவில்லை பார்ல குடிப்பது யாரு? நம்ம ஊருக்காரன் தான் குடிக்கிறான். ஒரு கப் சுண்டலும், பொறியும் கொடுத்துட்டு 300 ரூபா பில்லு. ரூ.170 பீரு, 300 ரூபாய்க்கு பொறியும் சுண்டலும். மானங்கெட்ட பொழப்பா இருக்கு. கட்சிக்கே கெட்ட பெயரா இருக்கு. அண்ணா (திமுக மாவட்ட நிர்வாகி) இதை நீங்க சரி பண்ணுங்க. இதில உங்க பேரும் கெட்டுப் போயிருக்கு… கட்சிப் பேரும் கெட்டிடும்” என அந்த ஆடியோவில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்த தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பிய நிலையில், கொக்கரக்கோ பார் உரிமையாளர் சாமிநாதன் தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து வெளியான தகவலின்படி, அனுமதி பெற்று பார் நடத்துவதாகவும், அதிக விலைக்குத்தான் விற்க வேண்டும் என யாரும் உத்தரவிடவில்லை. தான், எந்த கட்சியினருக்கும் போலீசுக்கும் பணம் கொடுப்பதில்லை எனவும் அவர் தரப்பில் கூறப்பட்டது. அதேநேரம், கலால் துறை துணை ஆணையரும், போலீசாரும் கொக்கரகோ பாரில் ஆய்வு நடத்தினர். இதில், மனமகிழ் மன்றம் என்ற பெயரில் உறுப்பினர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்ய அனுமதி பெறப்பட்டதும், அந்த அனுமதியும் 2019ம் ஆண்டே காலாவதியானதும் தெரிய வந்தது. இதையடுத்து, கொக்கரகோ மதுபான பாருக்கு அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர்.
செந்தில் பாலாஜி சுறுசுறுப்பு!
இந்த விவகாரத்தில் திமுக மேலிடப் புள்ளிகள் பெயர் அடிபடவே, இதைக் கேட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி டென்ஷன் ஆனதாகக் கூறப்படுகிறது. மேலும் சுறுசுறுப்பாக நடவடிக்கையில் இறங்கினார். அவரது அறிவுறுத்தலின் பேரில் தான் பாருக்கு சீல் வைத்ததாக கூறுகிறார்கள். இந்த விவகாரம் குறித்து அவர் டிவிட்டரிலும் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது பதிவில், “திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் முருகபாளையம் ஹெல்த் அண்ட் ரீ கிரியேஷன் கிளப் என்ற பெயரில் 2018-19 ஆம் ஆண்டில் அனுமதி வழங்கப்பட்ட கிளப் விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் அதற்கு வழங்கப்பட்டிருந்த ஒரு அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு மது வழங்கும் கூடத்தை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது” என பதிவிட்டுள்ளார்.

அமைச்சரின் இத்தகைய நடவடிக்கை மூலம், பல்லடம் கொக்கரகோ மதுபான பாரில் விதிமீறல் நடந்திருப்பதும், கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கப்பட்டு பகல் கொள்ளை நடந்து வந்திருப்பதும் உறுதியாகி இருக்கிறது. இதேபோல் திருப்பூர் மாவட்டத்தில் மேலும், பல பார்களில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை நடப்பதாக `குடி’மகன்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மற்ற பார்களையும் கவனிக்கணும்!
ஏற்கனவே, கள்ளச் சாராய விவகாரத்தில் முதல்மைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தர்மசங்கடத்திற்கு ஆளாகியுள்ளது. இந்த நிலையில் பல்லடம் கொக்கரகோ மதுபான விவகாரமும் புயலைக் கிளப்பியுள்ளது. எனவே, புகாருக்குள்ளான பாரினை மட்டும் சோதனை நடத்தி, பெயரளவுக்கு நடவடிக்கை எடுக்காமல், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மற்ற மதுபான பார்கள், மனமகிழ் மன்றங்களிலும் திடீர் சோதனை நடத்த வேண்டும்; உரிமம் புதுக்கப்பிக்கப்பட்டுள்ளதா, விற்பனையில் விதிமீறல்கள் உள்ளதா என்பதை கண்டறிந்து முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் மதுபான விவகாரம், வரும் தேர்தலில் திமுகவை தள்ளாடச் செய்யும் என்பதே நிதர்சனம்!






