--- --:--:-- --

திருவாடானை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கல்வெட்டு படியெடுத்தல் மற்றும் கட்டடக்கலை பயிற்சி..!

14

உலக மரபு வார விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையும், திருவாடானை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றமும் இணைந்து கல்வெட்டு படியெடுத்தல் மற்றும் கட்டடக்கலை பயிற்சியை திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் நடத்தியது.

 

பயிற்சிக்கு திருவாடானை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சு.சிவசைலம் தலைமை தாங்கினார். உதவி தலைமையாசிரியர் கி.கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் செயலர் ரஜினி பயிற்சியை ஒருங்கிணைத்தார்.

 

சிவன் சந்நிதியின் தெற்கே தரையில் இருந்த கல்வெட்டை படி எடுத்து, அதில் இருந்த தகவல்களை ராமநாதபுரம் மாவட்ட தொன்மை பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் வே.ராஜகுரு மாணவர்களுக்கு படித்துக் கூறினார்.

 

இது பாண்டியர் காலத்தைச் சேர்ந்த ஒரு துண்டுக் கல்வெட்டு, இதில் தேவன் பொன்னாண்டான், போரிலழகியாள் ஆகிய எழுதப்படிக்கத் தெரியாத இரு தற்குறிகள் குறிப்பிடப்படுகிறார்கள். நாட்டுக்கணக்கு கூத்தாடுவான், சேனாவரையன் ஆகிய பெயர்களும் இதில் உள்ளன. இது இக்கோயிலுக்கு நிலக்கொடை வழங்கிய கல்வெட்டின் கடைசிப் பகுதி என்றார்.

 

கோபுரம், விமானம், கருவறை, அதிஸ்டானம், பாதசுவர், பிரஸ்தரம், கிரீவம், சிகரம், ஸ்தூபி, கபோதம், போதிகை போன்ற கோயில் கட்டடக்கலை அமைப்பு பற்றி ராமநாதபுரம் மாவட்ட தொல்லியல் அலுவலர் ம.சுரேஷ், சிவகங்கை மாவட்ட தொல்லியல் அலுவலர் ரே.பரத்குமார் ஆகியோர் விளக்கினர்.

 

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர் ரியாஸ்கான், முதுகலை ஆசிரியர் தீபன் சக்ரவர்த்தி ஆகியோர் செய்தனர். பள்ளி மாணவர்கள் 40 பேர் பயிற்சியில் கலந்து கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon