ரயில் நிலையத்தில் நடைபெறும் விசாரணை..!
சென்னையில் ரயில் முன் மாணவியை தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணையை துவங்கியுள்ளனர். பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யாவை ரயிலில் முன் தள்ளிவிட்டு சதீஷ் என்ற இளைஞர் படுகொலை செய்தார்.
இது தொடர்பாக கைது செய்யப்பட்ட சதீஷ் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிபிசிஐடி அதிகாரிகள், காவல்துறை கண்காணிப்பாளர் செல்வகுமார் மற்றும் புருஷோத்தமன் தலைமையில் 5 பேர் காவலர்கள் கொண்ட குழு சம்பவம் நடைபெற்ற பரங்கிமலை ரயில் நிலையத்தில் விசாரணையைத் துவங்கியது. சம்பவத்தின் போது அங்கு பணியில் இருந்த ரயில்வே ஊழியர்கள், பாதுகாப்பு படையினர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் ரயில் நிலையத்தில் உள்ள இருபத்தி எட்டு சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்கின்றனர். மாணவியின் வீடு அமைந்துள்ள குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளிலும் ஆய்வு மேற்கொள்கின்றனர்.





