--- --:--:-- --

ஜெய்வாபாய் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 முடித்து மேற்படிப்புக்கு செல்லாமல் இருக்கும் மாணவிகளை கண்டறிந்து உதவ தீர்மானம்..!

1

திருப்பூர் ஜெய்வாபாய் மாதிரி நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு கூட்டம் பள்ளி வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ரத்னா முன்னிலை வைத்தார்.

 

பள்ளி தலைமை ஆசிரியை ஸ்டெல்லா அமலோற்ப மேரி வரவேற்றார். கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு செயல்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. இதனையடுத்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு : பள்ளியில் பிளஸ் 2 முடித்து சென்ற மாணவிகள் மேற்படிப்புக்கு செல்லாமல் வீட்டில் இருந்தால் அதற்கான காரணம் என்ன? எதனால் மேற்படிப்பு படிக்க செல்லவில்லை என்பது குறித்து சம்பந்தப்பட்ட மாணவிகள் வீடுகளுக்கு சென்று அவர்களது பெற்றோர்களிடம் பேசி அந்த மாணவிகளை மேற்படிப்பு படிக்க வைக்க நடவடிக்கை எடுப்பது, அதேபோல் பள்ளியில் இருந்து குறைந்தது 15 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவிகளை கண்டறிந்து, வராமல் இருக்கும் காரணத்தை கண்டறிந்து அதன் தன்மைக்கு ஏற்ப ஆலோசனை செய்து அவர்களை மீண்டும் பள்ளிக்கு கொண்டு வர ஏற்பாடு செய்வது, பள்ளிக்கு அருகே பின்புறமுள்ள கேட் வழியாக அரசு டவுன் பஸ்கள் நின்று செல்லதக்க நடவடிக்கை எடுப்பது. நஞ்சப்பா பள்ளி சாலையில் உள்ள ரோடுகளுக்கு முன்பு உள்ள வாகனங்களை அகற்ற காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பது. பள்ளி வளாகத்தில் சேரும் குப்பைகளை தேங்காமல் உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 

பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினராக இருந்த விமலா தனது சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்ததால் அந்த உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடந்தது. 4 பேர்கள் போட்டியிட்டதில் சிவப்பிரியா தேர்ந்து எடுக்கப்பட்டு பதவி பெற்றுக்கொண்டார். தேர்தலின்போது தி.மு.க வை சேர்ந்த மகளிரணி நிர்வாகி சாந்தி போட்டியிட்டு தோற்றுப்போனார்.

 

அதனால் கோபமடைந்த சாந்தி பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மகேஸ்வரியிடம் தகாத வார்த்தை கூறி வாக்குவாதம் செய்தார். ஒருகட்டத்தில் கைகலப்பு ஆகும் நிலைமை ஏற்படும் சூழல் வந்தது.உடனே சுதாகரித்த தலைமையாசிரியை மற்றும் உறுப்பினர்கள் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

 

கூட்டத்தில் மேலாண்மை குழு உறுப்பினர்கள் சத்தியவதி, பத்மபிரியா, தேன்மொழி, சுதா, சாய்தா பானு, பிரமுஅம்மாள், முத்தமிழ்செல்வன், கிருஷ்ணமூர்த்தி, சஃபியுல்லா, ஐயப்பன் மற்றும் ஆசிரியப் பிரதிநிதி சர்வேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Right Menu Icon