8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்!
ஊதியக் குழுவின் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வழங்கப்படும். அந்த அடிப்படையில், கடந்த 2016ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட 7வது ஊதியக் குழுவின் அடிப்படையில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஏழாவது ஊதியக் குழுவின் காலம் வரும் 2026ஆம் ஆண்டோடு நிறைவடைய உள்ள நிலையில், எட்டாவது ஊதியக் குழு குறித்தான எதிர்பார்ப்பு மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் எழுந்துவருகிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டாவது ஊதியக் குழு அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் மூவர் அடங்கிய எட்டாவது ஊதியக் குழு அமைக்கப்படுவது மற்றும் பரிந்துரை விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய அமைச்சரவை கடந்த ஜனவரி மாதம் ஒப்புதல் அளித்த 8வது ஊதியக் குழுவின் பரிந்துரை விதிமுறைகளுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ், 8வது ஊதியக் குழுவின் தலைவராக செயல்படுவார். மேலும், பேராசிரியர் புலாக் கோஷ், ஐ.ஏ.எஸ். பங்கஜ் ஜெயின் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருப்பர். 2026 ஜனவரி மாதம் முதல் செயல்படத் துவங்கி, அடுத்த 18 மாதங்களில் பரிந்துரைகளை மத்திய அரசுக்கு இக்குழு வழங்கும் எனத் தெரிவித்தார்.






