--- --:--:-- --

கரையை நெருங்கும் ‘மொந்தா’ புயல்..!

3

மொந்தா புயல் ஆந்திராவின் காக்கிநாடா அருகே இன்று இரவுக்குள் கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மொந்தா புயல் இன்னும் சற்று நேரத்தில் ஆந்திரப்பிரதேசத்தில் காக்கிநாடா அருகே மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.

 

இதனால் அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.

 

இந்நிலையில், ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தை மொந்தா புயல் நெருங்கி வருகிறது. காக்கிநாடாவுக்கு தெற்கே 130 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. மேலும் 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் புயலால் காக்கிநாடா பகுதியில் கடல் சீற்றம் அதிகரித்து காணப்பட்டது. மேலும், கடற்கரையை ஒட்டிய வீடுகள், குடிசைகள் சேதம் அடைந்தன. அங்கு குடியிருப்பவர்கள் பாதுகாப்புடன் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

 

புயல் கரையை கடந்து காற்றின் வேகம் குறையும் வரை, பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கான ரம்பங்கள், பொக்லைன் இயந்திரங்கள், கிரேன்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விஜயவாடா கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.

Right Menu Icon