சென்னை விமான நிலையத்தில் 8 விமான சேவைகள் ரத்து..!
சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று ஒரே நாளில் 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் சிரமம் அடைந்தனர். சென்னை விமானநிலையத்தில் இருந்து தூத்துக்குடி, டெல்லி, மும்பை, ஹைதராபாத் இடையே இயக்கப்படும் 8 விமானங்கள் இன்று திடீரென்று ரத்து செய்யப்பட்டன.
குறிப்பாக சென்னையில் இருந்து இன்று காலை 8 மணிக்கு மும்பைக்கும், 9.45 மணிக்கு டெல்லிக்கும், இரவு 8.40 மணிக்கு டெல்லிக்கும் செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானத்தின் புறப்பாடு ரத்து செய்யப்பட்டது. இதேபோன்று, சென்னையில் இருந்து இன்றிரவு 8.40 மணிக்கு தூத்துக்குடி செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் புறப்பாடும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் இருந்து இன்று அதிகாலை 1.40 மணிக்கு சென்னை வரவேண்டிய ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் விமானமும் ரத்தானது.
இதேபோன்று டெல்லியில் இருந்து இன்று காலை 9 மணிக்கும், தூத்துக்குடியில் இருந்து பகல் 1.45 மணிக்கும் சென்னை வர வேண்டிய ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து இன்றிரவு 7.10 மணிக்கு சென்னை வர வேண்டிய ஏர் இந்தியா விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விமானங்களை ரத்து செய்ததற்கான காரணம் இதுவரை கூறப்படாத நிலையில், பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.





