சிலிண்டருக்காக 25 கி.மீ, 4 மணி நேர பயணம் செய்யும் திருச்சி மக்கள்!
திருச்சி மாவட்டத்திலுள்ள பச்சை மலையில் வசிக்கும் மக்கள் 4 மணி நேரம் பயணித்து சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் மலையடிவாரத்திலிருந்து பச்சை மலையில் இருக்கும் கிராமங்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
அதனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க அரசு அனுமதித்துள்ள நேரத்தில் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உறையூருக்கு சென்று எரிவாயு சிலிண்டர் எடுத்து வர வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசிக்கும் பச்சைமலையில் அத்தியாவசிய பொருட்களை வாரத்திற்கு இருமுறையாவது வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தாங்கள் விளைவிக்கும் பொருட்களையும் நேரடியாக அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.







