உடலை சவக்குழியில் வீசி எறிந்த 3 பேர் பணியிடை நீக்கம்!
புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடல் சவக்குழியில் தூக்கி வீசப்பட்ட விவகாரத்தில் 3 பேரை பணியிடை நீக்கம் செய்து முதலமைச்சர் நாராயணசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். கடந்த மூன்றாம் தேதி புதுச்சேரிக்கு உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த சென்னையை சேர்ந்த நபர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
பரிசோதனையில் அவருக்கு கொரொனா தொற்று இருந்தது உறுதியானது. அவரது உடல் வில்லியனூர் மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அடக்கம் செய்வதற்காக தோண்டப்பட்ட குழியில் அவரின் உடலை ஊழியர்கள் வீசியதாக சர்ச்சை எழுந்தது.
இந்த விவகாரம் குறித்து புதுச்சேரி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ,வில்லியனூர் பஞ்சாயத்து ஆணையர்ஆகியோரிடம் விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பினார்.
இந்நிலையில் உடலை சவக்குழியில் தூக்கி வீசியதாக வில்லியனூர் பஞ்சாயத்து ஊழியர்கள் 2 பேர், சுகாதாரத் துறை ஊழியர் ஒருவர் என மொத்தம் மூன்று பேரை பணியிடை நீக்கம் செய்து முதலமைச்சர் நாராயணசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.






