தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து, பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், நீலகிரி, கோவை ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதேபோல, சென்னை, செங்கல்பட்டு, நெல்லை, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், வேலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யும் எனக் கணித்துள்ளது.
ராமநாதபுரம், திருச்சி, நாமக்கல், கடலூர், கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும் பலத்த காற்றுடன் கூடிய கனமழையை எதிர்பார்க்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நாளை நீலகிரி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகக் கூறியுள்ள வானிலை மையம், கோவை, ஈரோடு, நாமக்கல், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனக் கணித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





