சென்னை மெட்ரோ 2-ம் கட்ட நிலையங்களுடன் நேரடி நடைபால இணைப்பு!
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட வழித்தடங்களில் அமைந்துள்ள மெட்ரோ நிலையங்களை அருகிலுள்ள தனியார் கட்டடங்களுடன் நேரடியாக இணைக்கும் புதிய திட்டத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
இதன்படி, பிரத்யேக நடைமேம்பாலங்கள் (எஃப்.ஓ.பி) மற்றும் உயர்த்தப்பட்ட நடைபாதைகள் மூலம் மெட்ரோ நிலையங்களை இணைக்க கார்ப்பரேட் நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் முன்வரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் கடைசி மைல் இணைப்பை வலுப்படுத்துவதோடு, ஊழியர்கள், மாணவர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மெட்ரோ ரயில் சேவையை எளிதாகப் பயன்படுத்த தடையற்ற பாதையை உருவாக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கட்டுமானத்துக்கான மூலதனச் செலவைச் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்களே ஏற்க வேண்டும் என்றும், பராமரிப்பு, மின்சாரம்/ சேவைகள், தூய்மை மற்றும் பாதுகாப்புப் பணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் வளாகங்களையும் மெட்ரோ நிலையங்களையும் ஒருங்கிணைப்பதன் மூலம் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை உயர்த்தி, அன்றாடப் பயணங்களுக்குத் தனியார் வாகனங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 118.9 கி.மீ தூரத்துக்கு மூன்று வழித்தடங்களில் 128 நிலையங்களுடன் சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது; இதில் வழித்தடம்-3 மாதவரம் முதல் சிப்காட் வரையும் (45.8 கி.மீ), வழித்தடம்-4 கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரையும் (26.1 கி.மீ), வழித்தடம்-5 மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையும் (47 கி.மீ) அமைக்கப்படுகின்றன.
அனுமதிக்கப்பட்ட கொள்கையின்படி, இந்த நடைபாதை இணைப்புகள் பொதுவாக மெட்ரோ நிலையங்களின் கட்டணமில்லாத பகுதியுடன் இணைக்கப்படும்; இருப்பினும், கட்டணப் பகுதியுடன் நேரடி இணைப்பு தேவைப்படும் பட்சத்தில், அதற்கான கூடுதல் செலவுகளைச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களே ஏற்க வேண்டும்.
தொழில்நுட்பச் சாத்தியக்கூறுகள் மற்றும் இதரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு முன்மொழிவும் தனித்தனியாகப் பரிசீலிக்கப்படும் என்றும், அனைத்து முன்மொழிவுகளுக்கும் உரிய அதிகார அமைப்பின் ஒப்புதல் அவசியம் என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் வரம்பு, விதிமுறைகள் மற்றும் பங்கேற்பதற்கான நடைமுறைகள் குறித்த விரிவான விருப்பக் கோரிக்கை (இ.ஓ.ஐ) ஆவணம் தனித்தனியாக வெளியிடப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.அலுவலகங்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் மெட்ரோ கட்டமைப்பைச் சுற்றியுள்ள வணிக மற்றும் நிறுவன வளாகங்களுடன் சிறப்பாக ஒருங்கிணைத்து, ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சிக்கும் எளிதான பயண அனுபவத்துக்கும் இந்த முயற்சி வழிவகுக்கும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





