நாகர்கோவில் யூடியூபர் மதுமிதா மீது திருட்டு வழக்கு பதிவு!
அதிக அளவு நகை, பணத்துடன் வீடியோ வெளியிட்டு வரும் நாகர்கோவிலைச் சேர்ந்த பிரபல யூடியூப்பர் மதுமிதா வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தம்மத்து கோணம் பகுதியில் அமைந்துள்ள விஐபி கார்டனில் யூடியூபர் மதுமிதா, தனது கணவர் வினோத்குமார் மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று ஷாப்பிங் செய்ய வெளியே சென்றவர்கள் இரவு நீண்ட நேரமாகி வீடு திரும்பி உள்ளனர்.
அப்போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு பேரதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக வீட்டின் ரகசிய அறைக்குச் சென்று தேடியபோது அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 118 சவரன் தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தை யாரோ கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது.இதுகுறித்து ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் மதுமிதா புகார் அளித்த நிலையில், போலீசார் களத்தில் இறங்கினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அன்சுல் நாகர் உத்தரவின் பேரில் கொள்ளையர்களை பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது.
தடயவியல் வல்லுநர்கள் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்துக் கொள்ளையடிக்கப்பட்ட வீட்டில் கிடைத்த கைரேகை பதிவுகளைச் சேகரித்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அதன்படி, கொள்ளையடித்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர். யூடியூபரான மதுமிதா தனது வலைதள பக்கங்களில் விதவிதமான நகைகள் அணிந்து கொண்டு தன்னிடம் உள்ள பணத்தை வெளிப்படையாக காண்பித்து ரீல்ஸ் வெளியிட்டதே நகைகள் கொள்ளை போக காரணம் எனச் சமூக வலைதளங்களில் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தான் யூடியூபர் மதுமிதா மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பேச்சிமுத்து என்பவருடன் மதுமிதா காரில் சென்றபோது அவருக்கு தெரியாமல் அவர் கழுத்தில் இருந்த ஐந்து சவரன் தங்க நகையை பறித்ததாக தற்போது அவர் அளித்த புகாரின் பேரில் ராஜகமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதிக அளவு நகை, பணத்துடன் வீடியோ வெளியிட்டு வரும் நாகர்கோவிலைச் சேர்ந்த பிரபல யூடியூப்பர் மதுமிதா வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





