சென்னை கோட்டை ஸ்டேஷனில் மின்சார ரயில் தடம் புரண்டது!
தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு வரும் புறநகர் மின்சார ரயில் சென்னை கோட்டை ரயில் நிலையம் அருகே தடம் புரண்டது.சென்னை புறநகர் பகுதியில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். காலாண்டு விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்றிருந்த அவர்கள், இன்று பள்ளிகள் திறக்கப்படுவதால் மீண்டும் சென்னை நோக்கி திரும்பி வருகின்றனர்.
தென் மாவட்டங்களில் இருந்து கார், வேன், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் மூலம் ஏராளமானோர் சென்னை வருவதால், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் சிறிது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக மதுராந்தகம், செங்கல்பட்டு, கிளாம்பாக்கம், வண்டலூர், பெருங்களத்தூர், தாம்பரம் ஆகிய பகுதிகளில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. வண்டலூர் – பெருங்களத்தூர்-தாம்பரம் இடையேயான ஜி.எஸ்.டி சாலையில் ஒரே நேரத்தில் அதிக வாகனங்கள் வந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போக்குவரத்தை சீர் செய்ய ஏராளமான போக்குவரத்து போலீசார் மற்றும் சட்ட ஒழுங்கு போலீசார் பணியில் ஈடுபட்டதை தொடர்ந்து, தற்போது பெருங்களத்தூர்-வண்டலூர் ஜி.எஸ்.டி சாலையில் பெருமளவு போக்குவரத்து பாதிப்பின்றி பொதுமக்கள் சென்னை நோக்கி பயணித்து வருகின்றனர்.
இதேபோல் வழக்கமாக சென்னையில் பணிபுரிபவர்கள் காலை நேரத்தில் அதிகம் பயன்படுத்தும் தாம்பரம் ரயில் நிலையத்திலும் இன்று கூட்டம் அலைமோதுகிறது. விடுமுறை முடிந்து திரும்பியவர்கள் ரயில்களில் சென்னை நோக்கி பயணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் தாம்பரத்தில் இருந்து கடற்கரை சென்ற ரயில் தடம் புரண்டுள்ளது. 5-வது பெட்டியில் ஒரு சக்கரம் தடம் புரண்டது. இதனால் அந்த வழித்தடத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டிருப்பதால் தாம்பரம் – கடற்கரை நோக்கி செல்லும் தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சென்னை கடற்கரை நோக்கி வரக்கூடிய மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. மேலும் புறநகர் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருப்பது பயணிகளுக்கு கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் வழக்கத்திற்கு மாறான கூட்டம் காணப்படும் நிலையில் தற்போது ரயில் சேவை பாதிக்கப்பட்டிருப்பது மக்களை அவதியடைய வைத்துள்ளது. தடம் புரண்ட ரயில் பெட்டியை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





