பர்தா அணிந்து வந்து நகை திருடிய பெண்..!
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நகைக்கடையில் பர்தா அணிந்து நகை வாங்குவது போல் நடித்து 5 பவுன் நகையை திருடிச் சென்ற பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சாத்தூரை சேர்ந்தவர் 42 வயதான மதன். இவர் அந்த பகுதியில் நகைக் கடை வைத்துள்ளார். கடந்த 26-ஆம் தேதி இவரது கடைக்கு பர்தா அணிந்து வந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர் நகை வாங்குவது போல் நடித்து கடை உரிமையாளரின் கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் 5 பவுன் நகையை திருடி சென்றார்.
இந்த சம்பவம் குறித்து கடை உரிமையாளர் மதன் சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காட்சி பதிவுகளை வைத்தும், சம்பவம் நடந்த நேரத்தில் அப்பகுதியில் உள்ள செல்போன் சிக்னலை வைத்து திருடிய பெண்ணின் அலைபேசி எண்ணை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தென்காசி மாவட்டம் புளியங்குடியில் வைத்து திருட்டில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்யப்பட்டார். விசாரணையில் தஞ்சாவூரை சேர்ந்த வினோத் மனைவி பிரியங்கா என்பதும் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இவர் இதே போன்று சென்னை, பாண்டிச்சேரி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து நூதன திருட்டில் ஈடுபட்டு கைதானதும் தெரியவந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




