உதயநிதியும், விஜயும் உடனடியாக நிறுத்த வேண்டும்– நயினார் நாகேந்திரன்
பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன், ”இந்துக்களின் புனித மந்திரங்களான “ஓம் சக்தி, பராசக்தி” மற்றும் “ஓம் காளி, ஜெய் காளி” உள்ளிட்டவற்றை எதுகை மோனையாக திரித்து, விஜயும், உதயநிதி ஸ்டாலினும் தங்களின் அரசியல் காழ்ப்புணர்ச்சியை தீர்த்துக் கொள்ளத் துடிப்பது அப்பட்டமான இந்துமத அழித்தொழிப்பு வெறி. இது கடும் கண்டனத்திற்குரியது” எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்து பெண் தெய்வங்களை தொடர்ந்து இழிவுபடுத்துவோருக்கு, பிற மதக் கடவுள்கள் குறித்து விமர்சிக்க துணிச்சல் இருக்கிறதா? காலத்தைக் கடந்து பிரபஞ்சத்தை கட்டி ஆளும் பெண் தெய்வங்களை, ஓம் எனும் பிரணவ மந்திரத்தினை அடிப்படையாகக் கொண்டு வணங்குவது தான் “ஓம் சக்தி, பராசக்தி” மற்றும் “ஓம் காளி, ஜெய் காளி” உள்ளிட்ட இந்துக்களின் வீர முழக்கங்கள்.
“அன்னையாக அவள் இருந்து நம்மை வழி நடத்துவாள்” என்ற நம்பிக்கையில் இந்த வார்த்தைகளை உச்சரிக்கும் ஒவ்வொரு முறையும், இந்துக்களுக்கு மெய்சிலிர்க்கும். புது உத்வேகம் பிறக்கும். அப்பேற்பட்ட இந்துக்களின் புனித மந்திரங்களை எதுகை மோனையாக திரித்து, விஜயும், உதயநிதி ஸ்டாலினும் தங்களின் அரசியல் காழ்ப்புணர்ச்சியை தீர்த்துக் கொள்ளத் துடிப்பது அப்பட்டமான இந்துமத அழித்தொழிப்பு வெறி. இது கடும் கண்டனத்திற்குரியது.
“மதச்சார்பின்மை” என்ற திரையின் பின்னால் ஒளிந்து கொண்டு, இந்துக்களின் மத அடையாளங்களை மட்டும் திட்டமிட்டு இழிவுபடுத்தும் அரசியல் கட்சிகள் எல்லாம், பிற மதங்களிடம் பெட்டிப் பாம்பாக அடங்கிக் கிடப்பது ஏன்? “வசுதைவ குடும்பகம்” என்ற சகோதர உணர்வின்பால் வளர்த்தெடுக்கப்பட்ட இந்துக்கள், தங்களின் மதத்தின் பெயரால் யாரையும் புண்படுத்த மாட்டார்கள் என்ற அலட்சியத்தாலா? அல்லது பிற மதங்களைத் தொட்டால் தங்கள் வாக்கு வங்கி பலமாக அடிவாங்கி விடும் என்ற அச்சத்தாலா?
இந்து மத நம்பிக்கைகளை தொடர்ந்து இழிவுபடுத்தியதால் தான் திமுக இன்று தனது ஆட்சியை இழந்து நிற்கிறது என்பதை, திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் உணர்ந்து கொள்ள வேண்டும்! இந்துக்களை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுவதை அடியோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




