5 மாதங்களில் 500 கொலைகள்! பெண்கள் பாதுகாப்பு எங்கே?
மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தேமுதிக பொதுச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பிரேமலதா விஜயகாந்த், “தமிழ்நாட்டில் இந்த 5 மாதங்களில் 500 கொலைகள் நடந்ததுதான் தவெகவின் சாதனை. அண்ணன், தம்பி, தாய்மாமன், பெண்களுக்கு பாதுகாவலன் என பேசும் முதல்வர், பெண்களுக்கு என்ன பாதுகாப்பு கொடுத்தார்” என கேள்வி எழுப்பி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதன் காரணமாக இரண்டு தொகுதிகளிலும், அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில் இன்று மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் பரந்தாமனுக்கு ஆதரவு திரட்டி தேமுதிக பொதுச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரச்சாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது; “தமிழ்நாட்டில் இந்த 5 மாதங்களில் 500 கொலைகள் நடந்ததுதான் தவெகவின் சாதனை. இதுமட்டுமின்றி தமிழ்நாடு முழுக்க பாலியல் வன்கொடுமைகள் நடப்பதுதான் சாதனை. இதே மதுராந்தகத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன் 5 வயது சிறுமியை வீட்டில் புகுந்து வன்கொடுமை செய்துள்ளனர். நான், அண்ணன், தம்பி, தாய்மாமன், பெண்களுக்கு பாதுகாவலன் என பேசும் முதல்வர் என்ன பாதுகாப்பு கொடுத்தார்.
உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு ஏன் இதனை எல்லாம் செய்யவில்லை என தம்பி விஜயிடம் கேட்டால், யார் எந்தத் துறை குறித்து கேள்வி கேட்டாலும், உடனே ஆறடி வளர்ந்த ஆதவ் அர்ஜுனா எழுந்து நின்று பதில் சொல்வார். நீங்க வெற்றி பெற்று இருக்கிறீர்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என கேட்டால், உடனே உதயநிதி, ஸ்டாலின், திமுக என திட்ட வேண்டியது.
மதுராந்தகத்தில் கோயில் முன் நின்று திமுக வென்றால் நான் பதவி விட்டு விலகுகிறேன் என தானே தன் வாயில் மண்ணை கொட்டிக்கொள்வதுபோல் ஆதவ் அர்ஜுனா சவால்விட்டுவிட்டுச் சென்றுள்ளார். என்றும் தமிழ்நாட்டு மக்கள் துரோகத்தின் பக்கம் நிற்கமாட்டார்கள்” என பேசி வாக்கு சேகரித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




