ஸ்ட்ராங் ரூமில் ஓடிய ‘ஜன நாயகன்’ படம்..!
தமிழகத்தில் கடந்த 23-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தி.மு.க கூட்டணி, அ.தி.மு.க கூட்டணி, நாம் தமிழர் கட்சி, த.வெ.க என மும்முனை போட்டி நடைபெற்றது. சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், வாக்கு எண்ணும் மைய கட்டுப்பாட்டு அறையில் ‘ஜன நாயகன்’ படம் ஸ்ட்ரீமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்தின் கட்டுப்பாட்டு அறையில் இருந்த தொழில்நுட்ப பணியாளர் யுவராஜ், தேர்தல் பாதுகாப்பு விதிகளை மீறி செயல்பட்டதால் அவர் மீது புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யுவராஜ் அங்குள்ள மடிக்கணினியில் நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக பார்த்ததோடு, அதனைப் புகைப்படமாக எடுத்து சமூக வலைதளத்திலும் பதிவிட்டுள்ளார்.
கடந்த 23-ஆம் தேதி வாக்குப்பெட்டிகள் வைக்கப்படுவதற்கு முன்பாக இந்தச் சம்பவம் நடந்துள்ளது. வாக்கு எண்ணும் மையத்தின் கட்டுப்பாட்டு அறையின் புகைப்படம் வெளியானது தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குச் சென்றுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட நபர் மீது சென்னை காவல்துறையில் புகார் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்படம் சென்சார் பிரச்சனை காரணமாக இதுவரை வெளியாகவில்லை. சமீபத்தில் இப்படம் இணையத்தில் லீக்கான சம்பவம் விஜய் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





