சால்வை அணிந்த ரோபோ.. அசத்தும் ஏ.ஐ தொழில்நுட்பம்..!
கோயம்புத்தூர் தெற்கு தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் செந்தில்குமாருக்கு ஆதரவாக, அக்கட்சியின் சால்வை அணிந்த ரோபோ ஒன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது தற்பொழுது பேசுபொருளாகியுள்ளது. பொதுமக்களுக்கு கை அசைத்தும், கைகுலுக்கியும் நூதன முறையில் இந்த ரோபோ வாக்கு சேகரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, த.வெ.க தலைவர் விஜய் குறைந்த அளவிலேயே களத்தில் பிரசாரம் மேற்கொண்டுள்ள நிலையில், அக்கட்சியின் வேட்பாளர்கள் இது போன்ற புதுமையான உத்திகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு முன்னதாக, திருவெறும்பூர் வேட்பாளர் விஜய்யின் அட்டை உருவப்படத்தைப் பயன்படுத்தியதும், கும்பகோணம் வேட்பாளர் ஹாலோகிராம் ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல், கொளத்தூர் தொகுதியில் விஜய்யைப் போன்ற உருவம் கொண்ட நபரைக் கொண்டு பிரசாரம் செய்யப்பட்டது. அந்த வரிசையில், தற்போது கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் ரோபோ பயன்படுத்தப்பட்டது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு விஜய் இதுவரை ஏழு மாவட்டங்களில் மட்டுமே பிரசாரம் செய்துள்ளதால், பிரசாரத்தின் உச்சகட்டமான இந்த நேரத்தில் அவரது வருகை குறைவாக இருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. இதற்குப் பதிலளித்துள்ள விஜய், காவல்துறை மற்றும் சில அதிகாரிகள் கடைசி நேரத்தில் த.வெ.க நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், த.வெ.க பாரம்பரிய பிரசார முறைகளை மட்டுமே நம்பியிருக்கவில்லை என்றும், கட்சிக்கு ஆதரவான ஒரு இயற்கையான அலை ஏற்கனவே தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இன்றுடன் பிரசாரம் நிறைவடைகிறது. பிரசாரத்தின் இறுதி நாளான இன்று, த.வெ.க தலைவர் விஜய் தென் சென்னையில் ரோடு ஷோ (வீதி உலா) மேற்கொள்வதுடன், சென்னையில் கட்சி நிர்வாகிகளிடையே உரையாற்றவும் திட்டமிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




