--- --:--:-- --

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. 3 நாட்களுக்கு மழை..!

3

தென் தமிழகம் மற்றும் கடலோர தமிழகத்தில் நாளை லேசான மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

இதனால், தென் தமிழகம் மற்றும் கடலோர தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் நாளை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் மற்றும் ஞாயிற்றுக்கிழமையன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

23 மற்றும் 24 ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. வட தமிழக மாவட்டங்களில் 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகாலையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் கணித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon