எடப்பாடி அணியில் டிடிவி! * தமிழக தேர்தல் களத்தில் திடீர் திருப்பம்.. * அமித்ஷா வியூகத்தால் பலம் பெறும் என்டிஏ!
தமிழக அரசியல் களத்தில் திடீர் திருப்பமாக, அதிமுக – பாஜக கூட்டணியில் அமமுக இணைந்துள்ளது. எங்களுக்குள் நடப்பது பங்காளி சண்டைதான் என்று கூறிய அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன், விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.
தமிழக அரசியல் வானிலையில் திடீர் திடீரென மாற்றங்கள், சூறாவளிகள் ஏற்பட்டு வருகிறது. ‘துரோகி’ என்று எடப்பாடி பழனிசாமியை வசைபாடியை டிடிவி தினகரன், இன்று அவரை ‘பங்காளி’ என்று உரிமையோடு கூறி, பியூஷ் கோயல் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். நேற்று வரை மாறி மாறி மல்லுக்கட்டியவர்கள், இனி ஒரே மேடையில் கைகோக்கப் போகிறார்கள்.
ஆம், அதிமுக – பாஜக கூட்டணியில் அமமுக அதிகாரப்பூர்வமாக இணைந்துவிட்டது. “எங்களுக்குள் நடப்பது பங்காளி சண்டைதான்; விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை” எனத் தத்துவம் பேசி, எடப்பாடி தலைமையிலான அதிமுக – பாஜக கூட்டணியின் கரங்களை இறுக்கியிருக்கிறார் டிடிவி தினகரன். இது வெறும் கூட்டணியா அல்லது டெல்லி போட்ட கணக்கா?
செப்டம்பர் மாதத்தில், “யாருடனும் சமரசம் இல்லை” என என்டிஏ கூட்டணியிலிருந்து வெளியேறியபோது தினகரன் காட்டிய வேகம் இருக்கிறதே… அது தனி ரகம்! எடப்பாடி பழனிசாமியை ‘துரோகி’ எனத் தாளித்து எடுத்தார். மறுபுறம், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் ரகசியப் பேச்சுகள், பொதுமேடையில் ‘தளபதி’க்கு பாராட்டு என 2026-க்கான ரூட்டை மாற்றியமைக்கப் பார்த்தார்.

ஆனால், “விஜய் தலைமையில் 3-வது அணி அமைந்தால் அதுவே மாற்று” எனத் தினகரன் போட்ட கணக்கு, கள யதார்த்தத்தில் வேறாக இருந்தது. விஜய் தரப்பிலிருந்து வந்த ‘சைலண்ட்’ ரெஸ்பான்ஸ் தினகரனை யோசிக்க வைத்தது. “என்னப்பா இது… களப்பணியே இல்லையே, எல்லாம் ‘ஒர்க் பிரம் ஹோம்’ அரசியலாக இருக்கிறதே?” என அலுத்துக்கொண்ட தினகரனுக்கு, மீண்டும் டெல்லி ரூட் வெளிச்சம் தந்தது.
இந்தத் திருப்பத்தின் பின்னணியில் இருப்பவர் அரசியல்‘சாணக்கியர்’ அமித்ஷா. எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றிருந்தபோது, “தனித்தனியாக நின்றால் திமுகவை வீழ்த்த முடியாது; அமமுகவை உள்ளே கொண்டுவாருங்கள்” என அமித்ஷா தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட ‘அட்வைஸ்’, எடப்பாடியை நெளிய வைத்தது. முதலில் முரண்டு பிடித்தாலும், வெற்றி இலக்கைக் கருதி அரைமனதுடன் “சரிங்க” எனத் தலையாட்டினார் எடப்பாடி. அடுத்த சில நாட்களில் தினகரனுக்கும் டெல்லி அழைப்பு பறந்தது.
டெல்லியில் நடந்த அந்த ‘உயர்நிலை’ சந்திப்பில், தொகுதிப் பங்கீடு பற்றி காரசாரமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. அமமுக தரப்பில் இரட்டை இலக்கத் தொகுதிகள் கேட்கப்பட, எடப்பாடியோ கஞ்சத்தனம் காட்டியிருக்கிறார். ஆனால், பியூஷ் கோயல் தமிழகம் வந்ததும் நிலைமை மாறியது. சென்னையில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், “அதிமுக கூட்டணியில் இணைகிறோம்” எனத் தினகரன் அறிவித்தபோது தொண்டர்களே ஒரு நிமிடம் திகைத்துத்தான் போனார்கள்.
“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்” – செய்தியாளர்கள் சந்திப்பில் இந்தத் திருக்குறளைத் தினகரன் உதிர்த்தபோது, அங்கே அரசியல் நையாண்டி தாண்டவமாடியது. எடப்பாடியை ‘இன்னா செய்தவர்’ லிஸ்டில் வைத்துக்கொண்டே, அவருக்கு ‘நன்னயம்’ செய்யத் தயாராகிவிட்டார் டிடிவி.
சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில், புதன் கிழமை காலை பியூஷ் கோயல், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் முன்னிலையில் இந்த ‘பங்காளி’ உடன்படிக்கை கையெழுத்தானது. ஆண்டிப்பட்டி உள்ளிட்ட தினகரன் விரும்பிய 7 முதல் 10 தொகுதிகளை ஒதுக்க எடப்பாடி சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தக் கூட்டணியின் பலம் என்ன? கடந்த தேர்தலில் அதிமுகவின் வெற்றியை 27 தொகுதிகளில் தட்டிப்பறித்தவர் தினகரன். குறிப்பாக, தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகளைத் தினகரன் பிரித்ததே அதிமுகவின் வீழ்ச்சிக்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. இப்போது அந்த ஓட்டுகள் சிதறாமல் ஒரே கூடையில் விழுந்தால், அது திமுகவுக்குப் பெரும் சவாலாக அமையும் என்பதுதான் அமித்ஷாவின் மாஸ்டர் பிளான்.
டிடிவியை இழுத்துவிட்ட கையோடு, அடுத்து பிரேமலதாவின் தேமுதிகவையும் வளைக்கப் பியூஷ் கோயல் வலை விரித்துள்ளார். ஏற்கெனவே பாமகவின் அன்புமணி ராமதாஸ் உள்ளே இருக்கும் நிலையில், தேமுதிகவும் வந்துவிட்டால், ‘மெகா கூட்டணி’ ரெடி! வரும் 23-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் சென்னை பொதுக்கூட்டத்தில், இந்தத் தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் தோன்றப்போகும் காட்சி, தமிழக அரசியலின் ‘கிளைமாக்ஸ்’ நெருங்குவதைக் காட்டுகிறது.
பங்காளிகள் இணைந்திருக்கிறார்கள்… பகைவர்கள் மிரண்டிருக்கிறார்களா என்பது தேர்தல் முடிவில்தான் தெரியும்!
📱 Share on WhatsApp 𝕏 Share on X





