இன்று ‘பராசக்தி’ ரிலீஸ்..!
சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, ரவி மோகன், அதர்வா நடித்துள்ள பராசக்தி படம் இன்று திரைக்கு வரும் என படக்குழு அறிவித்திருந்தது. 1960-களில் இந்தி திணிப்புக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது.
குறிப்பாக, வரலாறு சார்ந்த கதை என்பதால், வரலாற்று தரவுகளை சரிபார்க்க வேண்டும் என்று தணிக்கை குழு கூறியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், பராசக்தி திரைப்படத்திற்கு U/A 16+ சான்றிதழை தணிக்கை வாரியம் வழங்கியுள்ளது. அதாவது 16 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தால் பெற்றோருடன் மட்டுமே பராசக்தி படத்தை திரையரங்கில் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்.
25 இடங்களிலும் கட் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே சென்சாரில் கட் செய்யப்பட்ட வசனங்களை ப்ரோமோவாக படக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கிடையே, தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில், விஜயின் ஜனநாயகன் படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகாத சூழலில், பராசக்தி படத்திற்கு திரைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
800 திரைகள் வரை பராசக்தி திரையிடப்படும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம், நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தார். அதில், “முதலில் 600 திரைகளில் ஜனநாயகனும், 400 திரைகளில் பராசக்தியும் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால், ஜன நாயகன் திரைப்படம் வெளியாகாததால் 800 திரைகள் வரை பராசக்தி திரையிடப்படும் வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்தார்.
ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனம், நீதிமன்ற வழக்கை வாபஸ் வாங்கிவிட்டு, ரிவியூ கமிட்டிக்கு சென்றால் இரண்டு, மூன்று தினங்களில் கூட படம் வெளியாக வாய்ப்பிருப்பதாக தணிக்கை வாரிய முன்னாள் உறுப்பினர் நரசிம்மன் கூறினார். அதேநேரம், ஜனநாயகன் விவகாரத்திற்கும், பாஜகவுக்கும் தொடர்பில்லை என அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். படத்தை முழுமையாக பார்த்த பிறகே, சென்சார் போர்டு உறுப்பினர்கள் கருத்து தெரிவித்திருப்பார்கள் எனவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




