--- --:--:-- --

வருமான வரித்துறையால் நடிகர் விஜய்க்கு புதிய சிக்கல்..!

2

நடிகரும், தவெக தலைவருமான விஜய் நடித்துள்ள கடைசித் திரைப்படம் ஜனநாயகன். பொங்கலுக்கு முன்பே ஜனநாயகன் வெளியாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மத்திய தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்காததால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், விஜய்க்கு வருமான வரித்துறை மூலமும் ஒரு தலைவலி வந்துள்ளது.

 

அதாவது நடிகர் விஜய் கடந்த 2016-17-ம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்தபோது, 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வருமான வரி அறிக்கையையும், 2015-ம் ஆண்டு நடிகர் விஜய் வீட்டில் நடத்திய சோதனையின்போது கைப்பற்றிய ஆவணங்களையும் வருமான வரித்துறை அதிகாரிகள் மதிப்பீடு செய்தனர்.

 

அப்போது, புலி படத்தில் நடிப்பதற்கு 15 கோடி ரூபாய் பெற்றதை, வருமான வரிக்கணக்கில் காட்டாமல் நடிகர் விஜய் மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நடிகர் விஜய்க்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து வருமான வரித்துறை கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 30-ந்தேதி உத்தரவிட்டது.

 

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அபராத தொகைக்கு இடைக்கால தடை விதித்தது. நிலுவையில் இருக்கும் இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த அபராத தொகையை காலதாமதமாக விதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் கூறுவது சரியில்லை என தெரிவித்தார்.

 

மேலும், விஜய் தரப்பில் வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை அணுகினார்கள் என்றும், தீர்ப்பாயம் உத்தரவிட்ட பின்னர் தான் இந்த அபராதத்தை வருமான வரித்துறை விதித்துள்ளதால் தவறு எதுவும் இல்லை எனவும் வாதிடப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக விஜய் தரப்பு பதில் அளிக்கும்படி உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை வருகிற 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon