--- --:--:-- --

சுதந்திரப் போராட்ட வீரர்களை ஊக்குவித்த வந்தே மாதரம் – மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு

1

ந்தியாவின் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலின் 150 ஆண்டுகள் நிறைவடைவது குறித்து இன்று (டிசம்பர் 8) மக்களவையில் சிறப்பு விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, “வந்தே மாதரம் ஊக்குவித்த சுதந்திரப் போராட்டத்தால் நாம் இன்று சுதந்திரமாக இங்கு அமர்ந்திருக்கிறோம்.

 

ஆகவே இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கூட்டணி என்றெல்லாம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார். மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது; “சர்தார் வல்லபாய் பட்டேல், பகவான் பிர்சா முண்டா ஆகியோரின் 150வது பிறந்தநாள் கொண்டாட்டங்களிலும் நாம் ஈடுபட்டு இருக்கிறோம். வந்தே மாதரம் பாடல் நமது சுதந்திரப் போராட்டத்தில் மிக முக்கிய பங்காற்றியது.

 

நமது போர் முழக்கத்தின் அடிப்படையாக இருந்தது வந்தே மாதரம். வந்தே மாதரத்தின் 100வது ஆண்டு என்பது இந்தியாவின் அவசரகாலம் அமல்படுத்தப்பட்ட காலத்தில் வந்தது. வந்தே மாதரத்தின் 100வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டபோது இந்தியாவின் ஜனநாயகம் மழுங்கடிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த 150வது ஆண்டு இந்தியாவின் சுயசார்பு காலத்தில் கொண்டாடி வருகிறோம்.

 

தற்போது நாம் மேற்கொள்ளும் இந்த விவாதம் எதிர்கால இந்தியாவிற்கு ஊக்கமளிப்பதாக இருக்கும். வந்தே மாதரம் இயற்றப்பட்டபோது நாடு அடிமைச் சங்கிலியில் சிக்கி இருந்தது. நாடு அடிமைப்பட்டு இருந்தது நமது வரலாற்றில் கருப்பு அத்தியாயம். வந்தே மாதரம் ஊக்குவித்த சுதந்திரப் போராட்டத்தால் நாம் இன்று சுதந்திரமாக இங்கு அமர்ந்திருக்கிறோம். ஆகவே இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கூட்டணி என்றெல்லாம் இல்லை.

 

வரும் 2047ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாக வந்தே மாதரம் நம்மை ஊக்குவிக்கும்.வங்காளம் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டிலும் மக்களின் ஊக்கமாக வந்தே மாதரம் பாடல் இருந்தது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை பிளவுபடுத்தி இருந்தாலும், வந்தே மாதரம் பாடல் இந்தியர்களை ஒன்றிணைத்தது. உலக அளவில் வந்தே மாதரம் பாடலுக்கு இணையான சக்தி வாய்ந்த பாடல் கிடையாது.

 

அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த இந்தியர்களின் உணர்வுகளை சுதந்திரத்தை நோக்கி தூண்டி விட்டது வந்தே மாதரம் பாடல். ஆங்கிலேயர்களுக்கு எதிராக கப்பல் ஓட்டி மிகப்பெரிய சுதந்திர உணர்வை வ.உ.சி வெளிப்படுத்தினார். தமிழ் மொழியில் கவிதைகளை எழுதி ஆங்கிலேயர்களை கலங்கடித்தவர் தமிழரான சுப்பிரமணிய பாரதி” என பேசினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon