எடப்பாடி பழனிசாமி தேர்வுக்கு எதிரான வழக்கு : உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

திமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிரான மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை 4வது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி பாலாஜி, சூரியமூர்த்தி அ.தி.மு.க.வின் உறுப்பினரே இல்லை என்றும், உறுப்பினர் அல்லாத ஒருவர் கட்சி விவகாரங்களில் கேள்வி எழுப்ப முடியாது என்றும் கூறி உரிமையியல் நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் சூரியமூர்த்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.