இரண்டரை கோடி வாக்குகளைப் பெற்று திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‘என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி’ என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க, பசி, உறக்கம், குடும்பம் ஆகியவற்றைத் துறந்து எஸ்.ஐ.ஆர்.பணிகளில் ஈடுபட்டு வரும் அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கட்டமைப்பைத் துல்லியமாக பயன்படுத்துவதே நமது முக்கிய வியூகம் என்றும், எத்தனை எதிரிகள் வந்தாலும், எத்தனை அணிகள் செயல்பட்டாலும், தமிழ்நாட்டை மீண்டும் ஆளப்போவது திமுகதான் எனவும் கூறினார்.
வெற்றி பெறுவதற்கு சாதகமான சூழ்நிலைகள் இருந்தாலும், எதிரிகளைக் குறைத்து மதிப்பிடக் கூடாது எனத் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் தேர்தல் ஆணையத்தை திமுக மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு எதிராகப் பயன்படுத்துவார்கள் என்றார்.
நாள்தோறும் ஏராளமான பொய்களைப் பரப்புவார்கள், போலி பிம்பங்களை உருவாக்குவார்கள் என்றும் அதனை எதிர்கொள்ள நமது பலத்தைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
தன்னைப் போல உறங்காமல் உழைக்க வேண்டுமென்பதை திமுகவினர் ஒவ்வொருவரிடமிருந்தும் தான் எதிர்பார்ப்பதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டரை கோடி வாக்குகளைப் பெற்று திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.






