நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி பதிலடி..!
அயோத்திபோல தமிழ்நாடு மாறுவது தவறில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருந்த நிலையில், எந்த அயோத்திபோல தமிழ்நாடு மாற வேண்டுமென திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். கார்த்திகை தீபத்தன்று திருப்பரங்குன்றத்தில், வழக்கத்திற்கு மாறாக மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணையில் உள்ள நிலையில், கடந்த 3 நாட்களாக திருப்பரங்குன்றம் மலை மீது பக்தர்கள் ஏறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாபர் மசூதி இடிப்பு தினமான இன்றும், மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் தர்காவிற்கு பொதுமக்கள் செல்ல தடை நீடிக்கிறது. நேற்று வரை அப்பகுதியில் 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட இருந்த நிலையில் இன்று கூடுதலாக 500 காவலர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே அம்பேத்கர் நினைவுநாளையொட்டி நயினார் நாகேந்திரன் இன்று சென்னையில் தொண்டர்களுடன் பேரணியாக நடந்து சென்று, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது தமிழகத்தை பாஜக அயோத்தி போல் மாற்ற முயற்சி செய்கிறது என்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கருத்து குறித்து அவர் பதில் அளித்தார்.
அப்போது, “அயோத்தி இந்தியாவில்தானே இருக்கிறது. அயோத்தி ஒன்னும் இங்கிலாந்திலோ ஐரோப்பாவிலோ இல்லையே. இந்தியாவில்தான் உள்ளது. தமிழ்நாடு அயோத்தி போல வருவதில் தவறில்லை. திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதில் அருகில் உள்ள இஸ்லாமியர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
நாங்கள் தர்கா அருகே செல்லவில்லை. தீபத்தூணில் மட்டும்தான் தீபம் ஏற்றுகிறோம். தீபம் ஏற்றுவதில் எந்த மதக் கலவரமும் ஏற்பட முகாந்திரம் இல்லை என தெரிவித்தார். இந்நிலையில் தமிழ்நாடு மாறுவது தவறில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறிய கருத்துக்கு கனிமொழி எம்.பி தனது எக்ஸ் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.
அதில், எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கடந்த தேர்தலில் ஆர்.எஸ்.எஸ் – பாஜகவைப் படுதோல்வி அடையச் செய்து, மக்கள் தூக்கியெறிந்த ஃபைசாபாத் தொகுதியில் உள்ள அயோத்தியைப் போலவா என வினவியுள்ளார். கவலை வேண்டாம்…. அப்படிதான் தமிழ்நாடு பல ஆண்டுகளாக இருந்து வருவதாகவும் கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




