வரும் தேர்தல் அதிமுக- பாஜக இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு முழுக்கு போடத் திட்டமிட்டுள்ளார் பாமக தலைவர் அன்புமணி. அதிகாரத்தில் பங்கு தருவதாக கூறிவரும் விஜயுடன் கூட்டணி அமைத்து, துணை முதல்வராகும் கனவில் அன்புமணி மிதந்து வரும் நிலையில், இது தொடர்பான பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
தமிழக அரசியல் களம் எப்போதுமே சுவாரஸ்யம் நிறைந்த சமையலறை போலத்தான்! ஒவ்வொரு நாளும் ஒரு புது வாசனை, புதுக் குழப்பம்! இப்போது, தமிழகமே பரபரப்பாகக் கிசுகிசுக்கும் ஒரு செய்தி, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், புதிதாகக் களமிறங்கியிருக்கும் ‘தமிழக வெற்றி கழகம்’ தலைவர் விஜய்யுடன் ரகசியமாகக் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவதுதான்.
அன்புமணிக்கு ஏன் திடீரென இந்தத் திருப்பம்? அதற்குப் பின்னால் இருக்கும் ‘பவர் கேம்’ என்ன? துணை முதல்வர் நாற்காலி ஆசைதான் காரணமா? வாருங்கள் விரிவாக அலசுவோம்… வரும் தமிழக சட்டசபைத் தேர்தல், ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தச் சூழலில், தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தேர்தல் பணிகளில் தீவிரமாக இருக்கின்றன. ஆனால், பாமக-வோ தன்னுடைய அடுத்த நகர்வு என்னவென்று அறிவிக்காமல், ஊசலாட்டத்தில் இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம், பாமக-வுக்குள் இப்போது நிலவும் அதிகாரப் போட்டிதான்!
‘ராமதாஸ் அணி’ மற்றும் ‘அன்புமணி அணி’ எனத் தந்தைக்கும் மகனுக்கும் இடையே கட்சி இரண்டு துண்டுகளாகப் பிளவுபட்டு, மாம்பழக் கட்சி பிசிறிப் போய்க் கிடக்கிறது. அ.தி.மு.க. – பா.ஜ.க. தலைவர்கள் எவ்வளவோ சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியும், பிளவு நீடிக்கிறது.
இதில், முக்கியமாக பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க.வின் உச்சகட்டத் தலைவர்கள் எப்போதுமே டாக்டர் ராமதாஸுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பது அன்புமணியின் நீண்டகாலக் கோபம். “நாம எவ்வளவு உழைச்சாலும், கடைசி நேரத்தில் நம்மைக் கழட்டிவிட்டுவிடுவார்கள்; அப்பாவுக்கே முன்னுரிமை கிடைக்கும்” என்று அன்புமணி தரப்பு நினைக்கிறது. அதனால்தான், தற்போதைய தே.ஜ.கூட்டணியுடன் ஒட்டிக்கொண்டிருந்தால், நமக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்காது என்று அவர் கருதுவதாகச் சொல்கிறார்கள். இதைப்பற்றி யோசித்த அன்புமணி, நடிகர் விஜய்யுடன் கைகுலுக்க திட்டமிட்டுள்ளார்.
கடந்த நவம்பர் 12-ஆம் தேதி, பாமக தலைவர் அன்புமணி, சென்னையில் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் சென்னையில் ஒரு அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இதற்குக் கூடுதல் முக்கியத்துவம் என்னவென்றால், இந்தக் கூட்டத்துக்கு ஒரு நாள் முன்னர்தான், ராமதாஸ் தரப்பு ‘மாம்பழம் சின்னம் தங்களுக்கே வேண்டும்’ என்று தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதியிருந்தது.
இந்த பின்னணியில், நிர்வாகிகள் மத்தியில் பேசிய அன்புமணி, “தி.மு.க.வை விடவும் நம்ம பாமக நல்ல கட்சி, இளைஞர்கள் அதிகம் உள்ள கட்சி. பூத் வேலைகளில் மட்டும் கோட்டை விடுகிறோம். அதைச் சரி செய்தால், நாம் தான் ஆளுங்கட்சி. நமக்குத் தான் மாம்பழச் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. எந்த நீதிமன்றத்திற்கு போனாலும் இனி இதை பறிக்க முடியாது” என்று ஒரு பக்கம் நிர்வாகிகளை உற்சாகப்படுத்தினார்.
அதைவிட முக்கியமாக, “இங்கே இருக்கிற நீங்கள் ஒரு சில மாதங்களில் எம்.எல்.ஏ-க்கள் ஆகப் போகிறீர்கள்… சிலர் அமைச்சர்கள் ஆகப் போகிறீர்கள்!” என்று அதிரடியாக அறிவித்தார். நிர்வாகிகளும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.
இந்த வார்த்தைகளில் தன இருக்கிறது ரகசியம். அ.தி.மு.க. கூட்டணியில் சீட் கிடைத்தால், நிச்சயம் அன்புமணி தரப்புக்கு அமைச்சர் பதவி எல்லாம் சாத்தியமில்லை. அப்படியென்றால், எதன் அடிப்படையில் அன்புமணி இப்படி ஒரு ‘பவர்புல்’ வாக்குறுதியைக் கொடுத்தார்?
இதுபற்றி பாமக வட்டாரத்தில் விசாரித்தபோது, “அதிகாரத்தில் பங்கு!” என்ற தவெகவின் மந்திரம்தான் அன்புமணியின் மனமாற்றத்திற்கு காரணம். அ.தி.மு.க.வில் அது சாத்தியமில்லை. ஆனால், விஜய்யின் தவெக-வில், “அதிகாரத்தில் பங்கு உண்டு” என்று விஜய் தரப்பு வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறது.
எனவே, நடிகர் விஜய்க்கு நெருக்க ஆடிட்டர் ஒருவர் மூலம், அன்புமணி தரப்பு ரகசியப் பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. தனது நீண்ட காலக் கனவான துணை முதல்வர் நாற்காலிக்கு விஜய்யின் கூட்டணிதான் சரியான வழி என்று அன்புமணி திடமாக நம்புகிறாராம்!
நடிகர் விஜய்யைப் பொறுத்தவரை, முதல்வர் வேட்பாளர் நாற்காலிதான் முக்கியம். அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தால், இந்த நாற்காலி விவகாரத்தில் சிக்கல் வரும். ஆனால், அன்புமணி தரப்புக்கு முதல்வர் நாற்காலியில் பிரச்சினை இல்லை. அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் ‘பவர் ஷேரிங்’ மட்டும்தான்.
அதேசமயம், கரூர் சம்பவம் நடந்தபோது, அன்புமணி அளித்த ஆதரவும், அதைத் தொடர்ந்து நடந்த கவனிப்புகளும் விஜய்க்கும் மனதளவில் திருப்தியை அளித்துள்ளதாகச் சொல்கிறார்கள். மொத்தத்தில், அன்புமணியின் வருகையில் விஜய்க்கும் எந்த ஆட்சேபமும் இல்லை என்று தெரிகிறது!
ஆகவே, வரும் தேர்தலில் விஜய் தலைமையிலான அணியில், பாமக (அன்புமணி அணி), டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை சேருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாம். காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது மட்டுமே இப்போதைய அரசியல் சஸ்பென்ஸாக நீடிக்கிறது.
இந்தக் கூட்டணிப் பேச்சுவார்த்தை உறுதியானால், தமிழக அரசியல் சமன்பாடுகள் அத்தனையும் ஆட்டம் காணும் என்பதில் சந்தேகமேயில்லை. இன்னும் என்னென்ன திருப்பங்கள் நடக்கப் போகின்றன என்று பொறுத்திருந்து பார்ப்போம்!






