பீகாரில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி! காங்கிராஸால் மண்ணை கவ்விய தேஜஸ்வி.. புஸ்ஸ்ஸ்.. ஆனது ராகுலின் ‘ஹைட்ரஜன் பாம்’!
பீகார் சட்டசபைத் தேர்தலில் எதிர்பார்த்ததை போலவே மீண்டும் பாஜக- ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி, அமோக வெற்றியை பெற்றுள்ளது. வாக்கு திருட்டு என்ற ஹைட்ரஜன் பாம் வீசுவதாகச் சொன்ன ராகுல் காந்தியின் தேர்தல் வியூகம், நமுத்துப் போன பட்டாசு போல், புஸ் என்றாகி ஏமாற்றத்தை தந்துள்ளது. காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தததால், தேஜஸ்வி யாதவின் ஆர்.ஜே.டி. வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடைசி நேரத்தில் பெண்களை குறிவைத்து பாஜக தரப்பு அள்ளி வீசிய வாக்குறுதிகள், தேர்தலில் வாக்குகளாக பலன் அளித்துள்ளன.
நாடே ஆவலுடன் எதிர்பார்த்த பீகார் தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. மொத்தம் 243 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக நவம்பர் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் நடைபெற்றது. முதற்கட்ட தேர்தலில், 65 சதவீத ஓட்டுகளும், இரண்டாம் கட்ட தேர்தலில், 67.14 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இதுவரை இல்லாதபடி, பிஹாரில் அதிக வாக்குகள் பதிவாகின.
இந்த தேர்தலில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், பெண்கள் அதிக அளவில் வாக்களித்து புதிய சாதனையைப் படைத்ததுதான். ஆம்! மொத்த வாக்குப்பதிவு 66.91% ஆக இருந்த நிலையில், பெண்களின் வாக்குப்பதிவு 71.6% ஆக உயர்ந்தது. இது ஆண்களின் வாக்குப்பதிவை (62.8%) விட 8.8 சதவீதம் அதிகம்.

இந்த தேர்தலில், எதிர்க்கட்சிகள் தரப்பில், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவை முதல்வராக முன்னிறுத்தி ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியான மகாபந்தன் கூட்டணி போட்டியிட்டது. எப்படியும் இந்த முறை நிதிஷ்குமாரிய வீழ்த்திவிடலாம் என்று நப்பாசிய கொண்டிருந்தன.
ஆளும் என்.டி.ஏ. தரப்பில், நிதிஷ்குமாரை முதல்வராக முன்னிறுத்தி பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும், இதுதவிர தனியாக பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும், அசாதுதீன் ஓவைசியின் கிராண்ட் டெமாக்ரடிக் கூட்டணியும் களம் இறங்கின.
தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி இன்று (நவம்பர் 14) காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆரம்பம் முதலே, தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னணி வகிக்கக்த் தொடங்கியது. ஆரம்பத்தில் என்.டி.ஏ.வுடன் போட்டியிடும் அளவுக்கு காங்கிரஸ்- ஆர்.ஜே.டி. கூட்டணி கவுரவமான இடங்களில் முன்னிலை வகித்தன. 10- 15 தொகுதிகளே வித்தியாசம் இருந்ததால், போட்டி கடுமையாக இருக்கும்; முடிவு இழுபறியாக இருக்குமோ என்று கருதப்பட்டது.
நேரம் செல்லச்செல்ல காட்சிகள் மாறத் தொடங்கின. ஒவ்வொரு சுற்று முடிவிலும் என்.டி.ஏ. கூட்டணியின் முன்னிலை அதிகரித்தது. நண்பகல் நிலவரப்படி மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் என்.டி.ஏ. 190 தொகுதிகளுக்கு மேல் முன்னிலையில் வகித்தது. இதில் பாஜக 84, ஐக்கிய ஜனதாதளம் 76, லோக்ஜனசக்தி 23 தொகுதிகளில் முன்னிலை வகித்தது.
அதேபோல், எதிர்க்கட்சியான மகாபந்தன் அணி 49 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. இதில் தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரீய ஜனதாதாளம் 35, காங்கிரஸ் 7, இடதுசாரிகள் 6 இடங்களில் முன்னிலை வகித்தன. தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுவராஜ் கட்சி, ஆரம்பத்தில் 4-5 இடங்களில் முன்னிலை வகித்த நிலையில் பின்னர் அது பூஜ்ஜியம் ஆனது.
பீகார் தேர்தலில் போட்டி கடுமையாக இருக்கும், ‘இழுபறி’ சூதாட்டம் நடக்கும் என்று டெல்லியில் இருந்துகொண்டே ஜோசியம் சொன்னவர்களின் கனவில் மண் விழுந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மீண்டும் அசுர பலத்துடன் ஆட்சியைப் பிடித்து விட்டது.
இதில் பரிதாபத்துக்குரியவர் யார் என்றால், இளைஞர்களின் ‘ஐகான்’ என்று வலம் வந்த தேஜஸ்வி யாதவ்தான்! “முதல்வராகப் போவது நான் தான்!” என்று கெத்தாக தேதி வரை குறித்து வைத்திருந்தார். ஆனால் அவரது கூட்டணி முன்னிலை வகிப்பதோ, வெறும் 49 தொகுதிகளில் மட்டும்தான். அதில் தேஜஸ்வியின் ஆர்.ஜே.டி.க்கு கிடைத்ததோ வெறும் 35+ இடங்கள். அதிர்ச்சியில் அவரே ‘அம்மாடி’ என்று உட்கார்ந்து விட்டாராம்.
தேஜஸ்வியின் இந்தக் ‘கவிழ்ந்த கப்பலுக்கு’ முக்கியக் காரணம் என்று அரசியல் அனலிஸ்ட்கள் கைகாட்டுவது அவரது கூட்டாளியான காங்கிரஸைத்தான். தேர்தல் தேதி அறிவித்த பின்னரும், கூட்டணிப் பங்கீடு செய்வதில் ராகுல் காந்தி காட்டிய ‘பிடிவாதப் போக்கு’தான் பெரிய வில்லங்கமாகிவிட்டது. இதனால் மக்கள் மத்தியில் மகாபந்தன் மீது ஒரு நம்பிக்கைக் குறைவு ஏற்பட்டது.

ராகுல் ஒருபடி மேலே போய், “வாக்குத் திருட்டு நடக்கப்போகிறது!” என்று எதையோ கிளப்பிவிட்டு, அதை ‘ஹைட்ரஜன் பாம்’ என்று வேறு வர்ணித்தார். ஆனால், அந்த ‘ஹைட்ரஜன் பாம்’ இப்போது நமுத்துப் போன பட்டாசு போல ‘புஸ்ஸ்ஸ்’ என்று அடங்கிப் போய்விட்டது. இந்தத் தேர்தல் முடிவுகள், ராகுலின் வியூகமெல்லாம் களத்தில் துளியும் பலனளிக்கவில்லை.
சரி, இந்த வெற்றிக் கோப்பையை யாருக்குத் தூக்கித் தருவது? அரசியல் பட்டிமன்றம் வைத்துப் பார்த்தால், பாயின்ட் போய் நிற்பது பெண்களின் வாக்குகள் பக்கம் தான். ஆமாம், இந்தத் தேர்தலில் ஒரு ‘சாதனை’ நடந்திருக்கிறது. மொத்த வாக்குப்பதிவு 66.91% ஆக இருந்த நிலையில், பெண்களின் வாக்குப்பதிவு 71.6% ஆக உயர்ந்ததாம்! இது ஆண்களின் வாக்குகளைவிட கிட்டத்தட்ட 8.8 சதவீதம் அதிகம். பீகார் வரலாற்றில் இது ஒரு ரெக்கார்ட்!
இந்த சாதனை சும்மா வரவில்லை. பின்னணியில் பாஜகவின் மாஸ்டர் ஸ்கெட்ச் இருக்கிறது. கடைசி நேரத்தில், பிரதமர் மோடி, பீகாரில் பெண்களுக்கான சுயதொழில் திட்டத்தை (முதல்வரின் மஹிளா ரோஜ்கர் யோஜனா) தொடங்கி, 75 லட்சம் பெண்களுக்கு ரூ.10,000 வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தச் சொல்லிவிட்டார். ‘வெறும் 10,000 தானே!’ என்று நீங்கள் நினைக்கலாம்.
ஆனால், கிராமப்புறப் பெண்களுக்கு இது பெரிய விஷயம். ‘ஆறு மாசம் கழிச்சு, நல்லா வேலை பார்த்தா, எக்ஸ்ட்ரா 2 லட்சம் வேற தரேன்னு சொல்லியிருக்காங்கப்பா!’ என்ற செய்தி காட்டுத் தீ போல பரவியது. சும்மா யோசித்துப் பாருங்கள்… இந்த ஒரு அறிவிப்பால், குடும்பத்தின் முடிவு எடுக்கும் சக்தியாக இருக்கும் பெண்கள் அத்தனை பேரும் தாமரைக்கு ஓட்டுப் போட்டு விட்டார்களாம்!
நிதிஷ் குமார் மீது மக்களுக்கு இருந்த பழைய பாசமும், மோடியின் இந்த ‘சட்டென’ செய்த காரியமும் சேர்ந்து என்.டி.ஏ. கூட்டணிக்கு 190-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை கொடுத்து, அமோக வெற்றிப் பரிசை அள்ளித் தந்துள்ளது!
தேர்தல் களத்தில் வேறு சில சுவாரஸ்யமான ஆசாமிகளும் இருந்தனர். இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் போன முறை கலக்கிய அசாதுதீன் ஓவைசி இந்த முறை ‘டம்மி’ ஆகிவிட்டார். மிகவும் எதிர்பார்த்த பிரசாந்த் கிஷோரின் ஜன் சுவராஜ் கட்சி ஆரம்பத்தில் நான்கு, ஐந்து இடங்களில் முன்னிலை என்றார்கள். ஆனால், கடைசியில் என்ன ஆனது? அது பூஜ்ஜியம் ஆனது! அவர் பிரித்த வாக்குகள், எதிர்க்கட்சிகளையே பாதித்து விட்டதாம். ‘தேர்தல் வியூக வகுப்பாளர்’ என்று வலம் வந்தவர், தனக்கு ஒரு சீட் கூட தேற்ற முடியாமல் போனது, பீகார் தேர்தல் கொடுத்த காமெடி ட்விஸ்ட்!
மொத்தத்தில், காங்கிரஸின் படுதோல்வி (61-இல் போட்டியிட்டு வெறும் 5+ இடங்கள்!), ராகுலின் ‘விசிட்டிங் கார்டு’ தலைமை, பாஜகவின் ஸ்மார்ட் பெண்கள் வாக்கு வியூகம் – இவை அனைத்தும் சேர்ந்து, மீண்டும் நிதிஷ் குமாரையே முதல்வராக்கி இருக்கிறது. ஒன்பதாவது முறையாக நிதிஷ் முதல்வராக பதவி ஏற்பாரா? அல்லது பாஜக மனதில் வேறு திட்டம் இருக்குமா என்பது அடுத்த ஓரிரு நாளில் தெரிந்துவிடும்
📱 Share on WhatsApp 𝕏 Share on X




