விஜய் விவகாரத்தில் முதலமைச்சர் நிதானமாக செயல்படுகிறார்.. அதுதான் சரியானது – டிடிவி தினகரன்
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “விஜய் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை, கைது செய்யவில்லை என திருமாவளவன் தனது கருத்தை முன்வைக்கிறார். ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த விவகாரத்தில் நிதானமாக செயல்படுகிறார். அதுதான் சரியும்கூட” எனத் தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பில் டிடிவி தினகரன் பேசியதாவது; “தற்போது கூட்டணி குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை. டிசம்பர் மாதம் தான் அதுபற்றி முடிவெடுக்கப்படும். அப்போது தனியாகவும் நிற்கலாம், வேறு சில கட்சிகளை இணைத்து ஒரு கூட்டணியும் அமைக்கலாம். எதுவாக இருந்தாலும் டிசம்பர் மாதம் தான் தெரியவரும். விஜய் விவகாரத்தை பொறுத்தவரை அரசுக்கு ஆதரவாகவோ, விஜய்க்கு ஆதரவாகவோ பேசவில்லை. நடுநிலையாக மட்டுமே பேசுகிறேன்.
விஜய் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை, கைது செய்யவில்லை என திருமாவளவன் தனது கருத்தை முன்வைக்கிறார். ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த விவகாரத்தில் நிதானமாக செயல்படுகிறார். அதுதான் சரியும்கூட. விபத்து என்பது யார் நடத்தும் கூட்டத்திலும் ஏற்படும். எனவே விஜய் மீது உடனே நடவடிக்கை எடுப்பது என்பது தவறான முன் உதாரணத்தை கொடுத்துவிடும்.
அதேசமயம், அவரை குற்றத்தை ஒப்புக்கொள்ளுங்கள் என யாரும் சொல்லவில்லை. நடந்த துயர சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறோம்” எனத் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




