ரயில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு முடிவு..!
ரயில்களின் கட்டணத்தை உயர்த்த இந்திய ரயில்வே முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பயனாளிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்திய ரயில்வேயில், ஏசி அல்லாத ரயில்களுக்கும், விரைவு ரயில்களுக்கும் கிலோமீட்டருக்கு ஒரு பைசாவும், ஏசி வசதி கொண்ட விரைவு ரயில்களுக்கு கிலோமீட்டருக்கு இரண்டு பைசாவும் உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தக் கட்டண உயர்வு வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் சொல்லப்படுகிறது.
இது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “விலைவாசி உயர்வு முதல் சிலிண்டர் விலை உயர்வு வரை நம் நடுத்தரக் குடும்பங்கள் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது கவலையை மேலும் அதிகரித்திட வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்திய இரயில்வே என்பது ஏழை – நடுத்தர மக்களின் பயணங்களுக்கானது மட்டுமல்ல; அது, அவர்களது அன்றாட வாழ்வில் ஓர் அங்கம். இன்று காட்பாடி செல்ல இரயில் நிலையம் வந்தபோது, என்னை அன்போடு வரவேற்ற மக்களிடம் பேசினேன். வழக்கமான உற்சாகமும் மகிழ்ச்சியும் குறைந்திருந்தது.
ஜூலை முதல் உயர்த்தப்படவுள்ள இரயில் கட்டணங்களும் – குறைந்து வரும் சாதாரண வகுப்புப் பெட்டிகளும் அவர்களது மகிழ்ச்சியைக் களவாடியுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோரை, மக்களின் சார்பாக நான் கேட்டுக்கொள்வது, AC பெட்டிகள் உயர்த்த வேண்டும் எனச் சாதாரண வகுப்புப் பெட்டிகளைக் குறைக்க வேண்டாம்.
இரயில் கட்டணங்களையும் உயர்த்த வேண்டாம். ஏற்கெனவே விலைவாசி உயர்வு முதல் சிலிண்டர் விலை உயர்வு வரை நம் நடுத்தரக் குடும்பங்கள் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது கவலையை மேலும் அதிகரித்திட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




