சென்னை வந்த பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா..!
இரண்டு நாட்கள் பயணமாக சென்னை வந்துள்ள பாஜக தேசியத் தலைவர் நட்டா, சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்த உள்ளார். பாஜக தேசியத் தலைவரும், மத்திய அமைச்சருமான நட்டா, இரண்டு நாட்கள் பயணமாக சென்னை வந்துள்ளார்.
அவரை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில முன்னாள் தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பாஜக மகளிரணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் ஆகியோர் வரவேற்றனர். சென்னையில் உள்ள தனியார் விடுதியில் இரவில் ஓய்வெடுக்கும் நட்டா, இன்று காலை 10.30 மணியளவில் தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 6ஆவது சர்வதேச சைவ சித்தாந்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
தொடர்ந்து மாலை 3 மணி அளவில் வேலூரில் உள்ள தங்க கோயிலுக்கு சென்று நட்டா சாமி தரிசனம் செய்ய உள்ளார். இதையடுத்து பாஜக நிர்வாகிகளை சந்தித்து தமிழ்நாட்டில் பூத் கமிட்டிகளை வலுப்படுத்துதல் மற்றும் கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து தேர்தல் பணியாற்றுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதைத் தொடர்ந்து, இன்று இரவு அவர் மீண்டும் விமானம் மூலம் டெல்லி திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம், பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




