--- --:--:-- --

மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

3

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக்கூட்டத்தில் தேர்தல் பணிகள், நிர்வாக மாற்றங்கள், இளைஞர்களுக்கு முக்கியத்துவம் விவாதிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

2019 மக்களவைத் தேர்தல் தொடங்கி அனைத்துத் தேர்தல்களிலும் திமுக கூட்டணியே தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகிறது. இந்த நிலையில், 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்கிற முனைப்பில், கடந்தாண்டே தேர்தல் பணிகளை தொடங்கிய திமுக, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடங்கிய தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு அமைத்து, மாவட்ட வாரியாக ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்தியது.

 

இதன் தொடர்ச்சியாக, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் காலை 10.30 மணிக்கு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.கட்சியின் ஆக்கப்பூர்வ பணிகள் குறித்து விவாதிக்கப்படும் கூட்டத்தில், அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து, மாவட்ட நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், உரிய அறிவுரைகளை வழங்குவார் என கூறப்படுகிறது.4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மேல் உள்ள கட்சி மாவட்டங்களை நிர்வாக ரீதியாக பிரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகவும், சரிவர செயல்படாத மாவட்டச் செயலாளர்களை சுட்டிக்காட்டி முதலமைச்சர் பேச வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

இளைஞர் அணி மற்றும் மாணவரணியில் இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவும்,சமூக வலைதளங்களில் அதிமுக – பாஜக கூட்டணி மற்றும் விஜயின் செயல்பாடுகளுக்கு பதிலடி கொடுப்பதற்கான அறிவுரைகளையும் முதலமைச்சர் வழங்குவார் என கூறப்படுகிறது.
கட்சி நிர்வாகிகள் மாற்றம், இளம் நிர்வாகிகளுக்கு புதிய பதவிகள் வழங்குவது குறித்தும் விவாதித்து முடிவெடுக்கப்பட வாய்ப்புள்ளதால், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon