அதிகபட்ச வெப்பம் பதிவாகும்.. அனல் காற்று வீசும்..!
தமிழ்நாட்டில் நேற்று வேலூர், ஈரோடு உட்பட ஒன்பது இடங்களில் வெயில் சதம் அடித்தது. தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், நேற்று ஒன்பது இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேலாக வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
ஈரோட்டில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், திருச்சி மற்றும் திருத்தணியில் தலா 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவானது. சென்னை மீனம்பாக்கம், கரூர் பரமத்தி, மதுரை, தஞ்சை, நாகையில் தலா 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இந்நிலையில், சென்னையில் இன்று வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஆந்திராவின் ராயலசீமா மற்றும் கர்நாடகாவின் உட்பகுதியில் இருந்து தமிழ்நாட்டின் வடக்குப் பகுதிக்கு அனல் காற்று வீசும் என்று தெரிவித்துள்ளார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பம் பதிவாகும் என்றும், சென்னை மீனம்பாக்கத்தில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் வரும் 16ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




