ஜிப்லி புகைப்படங்களை உருவாக்குவது பாதுகாப்பானதா..?
சமூக ஊடகங்களை ஜிப்லி புகைப்படங்கள் ஆக்கிரமித்துள்ள நிலையில், ஏஐ தளங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தனியுரிமை பாதிப்புகள் குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன. பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் என எந்த சமூக வலைதளத்துக்கு சென்றாலும் ஜிப்லி புகைப்படங்கள் கொட்டிக்கிடக்கின்றன. வழக்கமாக சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்களை பதிவிட விரும்பாதவர்கள் கூட, ஜிப்லியாக தங்கள் புகைப்படங்களை மாற்றி பதிவிட்டு வருகின்றனர்.
பார்ப்பதற்கு கியூட்டாக இருந்தாலும், அதன் பின்னால் ஆபத்துகளும் இல்லாமல் இல்லை.ஜிப்லி புகைப்படங்கள் குறித்து சமீபத்தில் எச்சரிக்கை விடுத்த நெல்லை நகர காவல்துறையினர், புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும்போது, பயனர்களின் ஒப்புதலின்றி அவற்றை ஏஐ தளங்கள் பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும், பாதுகாப்பான ஏஐ தளங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கூறி உள்ளனர்.
இதேபோன்ற எச்சரிக்கையை கோவா காவல்துறையும் விடுத்துள்ளது.ஏஐ தளத்தில் பயனர்கள் தங்களது கணக்கை தொடங்கும் போது, அவர்களின் தரவுகளைப் பயன்படுத்த அனுமதி அளித்துவிடுகின்றனர். செயற்கை நுண்ணறிவு என்பது, ஏற்கனவே இணையத்தில் இருக்கும் டேட்டாக்கள், பயனர்கள் அளிக்கும் தகவல்களை வைத்து தான் மேம்பட்டு வருகிறது.
எனவே அதன் முக்கியமான தகவல் களஞ்சியமே பயனர்கள் தான்.சென்னையைச் சேர்ந்த பெண்ணின் புகைப்படத்தை ஏஐ மூலம் நம்மால் உருவாக்க முடியும். அந்த புகைப்படத்தை உருவாக்க, சென்னையில் இருந்து பெண்கள் பதிவேற்றம் செய்த புகைப்படங்கள், இணையத்தில் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் வைத்து புதிதாக ஒரு புகைப்படத்தை ஏஐ உருவாக்கும்.
அதுமட்டுமின்றி, ஜிப்லி புகைப்படங்கள் நம்மைப் போலவே அச்சு அசலாக இருக்க வேண்டும் என்பதற்காக குவாலிட்டியான புகைப்படங்களை பயனர்கள் பதிவேற்றுகின்றனர். இதனால், கருவிழி உள்ளிட்ட பயோமெட்ரிக் தகவல்களையும் ஏஐ எளிதாகப் பெற்று விடுகிறது. நவீன உலகில் தனியுரிமையைப் பாதுகாக்கும் Digital Personal Data Protection Act என்ற சட்டம் 2023ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. ஆனால் இன்னும் அதற்கான விதிமுறைகள் வகுக்கப்படவில்லை. ஏஐ தளத்தை பயன்படுத்தும் போது சில கேள்விகளுக்கு முதலில் பயனர்கள் பதில்களை பெற வேண்டும்.
பதிவேற்றம் செய்யும் புகைப்படத்தை அந்த தளம் வேறு எதற்காகவும் பயன்படுத்துகிறதா?, பதிவேற்றம் செய்த பின்னர் புகைப்படத்தை டெலிட் செய்துவிட்டால், ஏஐ தளத்தின் டேட்டா பேசில் இருந்து அந்த புகைப்படம் அழியுமா?, தங்களது தரவுகளை தளத்தில் இருந்து முழுமையாக அழிக்க முடியுமா? மற்றும் தரவுகளை சேமிப்பது தொடர்பாக ஏஐ தளத்தின் விளக்கம் என்ன? உள்ளிட்டவற்றை அந்த தளங்களின் privacy கொள்கைகளை படித்து பயனர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இவற்றுக்கான பதில்கள் கிடைத்த பின் அந்த தளம் நம்பகத்தன்மையாக தெரிந்தால் மட்டுமே அதனைப் பயன்படுத்த வேண்டும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




